சிங்கப்பூரில் 65 ஆண்டுகளாக சேவையாற்றி வரும் பிரபலமான நன்யாங் ஆப்டிகல் கண் பராமரிப்பு நிறுவனம், தற்போது அதன் வர்த்தகத்தை நிறுத்திக்கொள்ளவிருக்கிறது.
வர்த்தகத்தின் உச்சத்தில் இருந்தபோது, அந்நிறுவனத்துக்குத் தீவு முழுவதும் 16 கிளைகள் செயல்பட்டன. அங்கு கண் சிகிச்சை உள்பட, பார்வைக்கு உதவும் பல பொருள்கள் சில்லறை விற்பனை செய்யப்பட்டன.
உள்ளூரில் தோற்றுவிக்கப்பட்ட நன்யாங் ஆப்டிகல் நிறுவனம் மூடப்படவிருப்பது பற்றிய விவரங்கள், கடந்த ஜனவரி 26ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டன.
நிறுவனத்தின் கலைப்பாளர்கள் வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் நியமனம் செய்யப்படவிருப்பதாக அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அச்சமயம் கடனீந்தோர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கவேண்டிய தொகை தெரிவிக்கப்படும் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்யாங் ஆப்டிகல் என்ற பெயரில் தற்போது ஐந்து கிளைகள் உள்ளன. ஆறாம் கிளை, ‘அலெக்சிஸ் ஐவேர் புட்டிக்’ என்ற பெயரில் ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள விஸ்மா ஏட்ரியா கடைத்தொகுதியில் செயல்படுகிறது.
நன்யாங் ஆப்டிகல் நிறுவனத்தின் பெயரில் செயல்பட உரிமம் பெற்றவர்களால் தொடர்ந்து இயக்கப்படும் மீதம் உள்ள இரண்டு கிளைகள் கிளமெண்டியிலும் பீஷானில் உள்ள ஜங்ஷன் 8 கடைத்தொகுதியிலும் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

