ஃபேஸ்புக்கில் மேம்படுத்தப்பட்ட முக அடையாளக் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்யும்படி மெட்டா நிறுவனத்துக்குச் சிங்கப்பூர்க் காவல்துறை இரண்டாவது உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவ்வாறு செய்யத் தவறினால் மெட்டா நிறுவனத்துக்கு $1 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இணையக் குற்ற தீங்குச் சட்டத்தின்கீழ் முக அடையாளக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும்படியான உத்தரவு செவ்வாய்கிழமை (ஜனவரி 27) விதிக்கப்பட்டது.
மோசடி விளம்பரங்கள், மோசடிக் கணக்குகள், பிரபலங்களுடைய கணக்குகளில் நிறுவப்படும் மோசடிப் பக்கங்கள் ஆகியவற்றை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சு சொன்னது.
இதற்குமுன் கடந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் அரசாங்கப் பதவிகளை வகிப்போர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அத்தகையோர் தொடர்பான மோசடிகளை முறியடிக்க இம்மாதம் 31ஆம் தேதிக்குள் முக அடையாளக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படவேண்டும்.
ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபடுத்தப்படக்கூடியோர் என்று காவல்துறை வகைப்படுத்தியுள்ள முக்கிய பிரமுகர்கள் தொடர்பான முக அடையாளக் கட்டுப்பாடுகள் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் அமல்படுத்தப்படவேண்டும்.
ஆள்மாறாட்ட மோசடிகளைத் தடுக்க ஜூன் 30ஆம் தேதிக்குள் கட்டங்கட்டமாக முக்கியமான பயனீட்டாளர்களின் முகங்களை அடையாளம் காணும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கவேண்டும்.
மெட்டா அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றாவிட்டால் $1 மில்லியன் அபராதம் செலுத்த நேரிடலாம். அதையடுத்து ஒவ்வொரு நாளும் அதிகபட்சம் $100,000 அபராதம் விதிக்கப்படக்கூடும் என்று உள்துறை அமைச்சு எச்சரித்தது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட முதல் உத்தரவை அடுத்து ஃபேஸ்புக் வழி நடைபெறும் ஆள்மாறாட்ட மோசடிகள் குறைந்ததாக உள்துறை அமைச்சு சொன்னது. ஆனால் முதல் உத்தரவில் குறிப்பிடப்படாத அரசாங்கப் பதவியில் உள்ளோரை மோசடிக்காரர்கள் குறிவைக்க தொடங்கினர் என்றது அமைச்சு.
கடந்த ஆண்டு 367,000க்கும் அதிகமான ஆள்மாறாட்ட மோசடிச் சம்பவங்கள் பதிவாகின. அதன் மூலம் $893.7 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.

