சிங்கப்பூரின் தொழிற்சாலை உற்பத்தி ஜனவரியில் ஆண்டு அடிப்படையில் 9.1 விழுக்காடு வளர்ச்சி கண்டது. அது தொடர்ந்து ஏழாவது மாதமாக விரிவடைந்துள்ளதாக பொருளியல் வளர்ச்சிக் கழகம் புதன்கிழமை (பிப்ரவரி 26) வெளியிட்ட தரவு குறிப்பிட்டது.
புளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் கருத்தாய்வில் பங்கெடுத்த பொருளியல் நிபுணர்களின் இடைநிலை முன்னுரைப்புடன் இந்த வளர்ச்சி ஒத்துப்போகிறது.
ஜனவரி வளர்ச்சி, டிசம்பரின் 5.2 விழுக்காட்டு விரிவாக்கத்தை முந்தியது. ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் உயிர்மருத்துவத் துறையைத் தவிர்த்து, தொழிற்சாலை உற்பத்தி ஆண்டு அடிப்படையில் 7.3 விழுக்காடு கூடியது.
மின்னணுவியல் துறை 18.9 விழுக்காடு விரிவடைந்தது. டிசம்பரின் 3.1 விழுக்காட்டு வளர்ச்சியிலிருந்து அது வேகமெடுத்தது.
ஏற்றுமதிக்கான தேவை காரணமாக, மின்னணுவியல் துறையினுள் சில அம்சங்கள் வலுவான வளர்ச்சி கண்டன. தகவல் தொடர்பு, பயனீட்டாளர் மின்னணுவியல் 47.8 விழுக்காடு ஏற்றம் கண்டது. பகுதிமின்கடத்திகள் 17.9 விழுக்காடும் கணினித் துணைச் சாதனங்கள், தரவுச் சேகரிப்பு 15.4 விழுக்காடும் வளர்ச்சி அடைந்தன.
எனினும், மின்னணுக் கூறு, உதிரிப் பாகங்களின் வளர்ச்சி 15.9 விழுக்காடு குறைந்தது. உலகளவில் மோட்டார் வாகனத் துறை சிறிது வீழ்ச்சி அடைந்ததே இதற்குக் காரணம் என்று கழகம் கூறியது.
மற்ற துறைகளின் செயல்பாடு மாறுபட்டு இருந்தது. உயிர்மருத்துவ உற்பத்தித் துறையின் வளர்ச்சி 19.3 விழுக்காடு கூடியது. போக்குவரத்துப் பொறியியல் துறை 3.8 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
மற்ற பிரிவுகள் ஆண்டு அடிப்படையில் சரிவைப் பதிவுசெய்தன. பொது உற்பத்தி 1.7 விழுக்காடும், வேதிப்பொருள் உற்பத்தி 2.4 விழுக்காடும் துல்லியப் பொறியியல் 7.5 விழுக்காடும் சரிந்தன.
தொடர்புடைய செய்திகள்
பருவத்திற்கேற்ப சரிசெய்யப்பட்டபின் மாத அடிப்படையில், ஒட்டுமொத்த தொழிற்சாலை உற்பத்தி ஜனவரியில் 4.5 விழுக்காடு அதிகரித்தது.

