தொழிற்சாலை உற்பத்தி 14.3% வளர்ச்சி: மூன்றாவது மாதமாகத் தொடர் ஏற்றம்

2 mins read
9098f74e-7fcf-4485-9a04-db1f1d071c95
சிங்கப்பூரின் மருந்தாக்கத் துறை நவம்பர் மாதம் 124.3 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் சற்றுக் கூடுதலான வளர்ச்சி இது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் தொழிற்சாலை உற்பத்தி நவம்பர் மாதத்திலும் ஏற்றம் கண்டது.

வளர்ச்சியின் வேகம் மெதுவாக இருந்தபோதிலும் அந்த மாதத்தில் அது 14.3 விழுக்காடு என்னும் திடமான வளர்ச்சியைப் பதிவுசெய்தது.

அதற்கு மருந்தாக்க உற்பத்தித் துறை பெரிதும் கைகொடுத்தது.

மூன்றாவது மாதமாக உற்பத்தித் துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டாலும், அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் கிட்டத்தட்ட பாதியளவு குறைந்ததாகப் பொருளியல் வளர்ச்சிக் கழகம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

எல்லா உற்பத்தித் துறைகளையும் உள்ளடக்கிய மொத்த உற்பத்தி அக்டோபர் மாதம் 28.9 விழுக்காடு என்னும் வளர்ச்சியைத் தொட்டது.

அதனைத் தொடர்ந்து, நவம்பர் மாதத்திற்கான முன்னுரைப்பை வெளியிட்ட பொருளியல் துறைப் பகுப்பாய்வாளர்கள் 15 விழுக்காட்டுக்குமேல் போகாது என்று கூறியிருந்தனர்.

புளூம்பெர்க் ஆய்வில் அவர்கள் வெளியிட்ட கணிப்பை ஒட்டியே முன்னோட்ட மதிப்பீடுகள் வெளிவந்துள்ளன.

நவம்பர் மாத வளர்ச்சியில் உயிர்மருத்துவத் துறை உற்பத்தி விகிதத்தை விலக்கிவிட்டுக் கணக்கிட்டால், மொத்த உற்பத்தி விகிதம் 4.6 விழுக்காடு மட்டுமே.

உயிர்மருத்துவத் துறையின் வளர்ச்சி சென்ற மாதம் படுவேகமாக இருந்தது.

அந்த ஒரு மாதத்தில் மட்டும் அதன் வளர்ச்சி 79.3 விழுக்காடு. இருப்பினும், அதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தில் பதிவான 89.8 விழுக்காட்டைக் காட்டிலும் அது சற்று குறைவுதான்.

அக்டோபர், நவம்பர் ஆகிய இரு மாதங்களிலும் உற்பத்தித் துறையை உயரத்தில் தூக்கி நிறுத்தியது மருந்தாக்கத் துறையின் வளர்ச்சியே.

அந்தத் துறையின் உற்பத்தி அக்டோபரில் 122.9 விழுக்காடாகவும் நவம்பரில் 124.3 விழுக்காடாகவும் பதிவானது. மருத்துவச் சாதனங்களுக்கான தேவை நீடித்ததன் காரணமாக மருத்துவத் தொழில்நுட்பத் துறை நவம்பரில் 11.3 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

அதேநேரம், சிங்கப்பூரின் ஒட்டுமொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கிற்குமேல் அங்கம் வகிக்கும் மின்னணுவியல் துறை 8.9 விழுக்காடு வளர்ச்சி கண்டதாகப் பொருளியல் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட தரவுகள் குறிப்பிட்டன.

பெரும்பாலான துறைகள் வளர்ச்சியைப் பதிவுசெய்தபோதிலும் பொதுவான உற்பத்தி சுருங்கியது. நவம்பர் மாதம் அது 4.8 விழுக்காட்டுக்கு இறங்கியது. அதேநேரம், உணவு, பானம் மற்றும் புகையிலையை உள்ளடக்கிய துறையின் வளர்ச்சி 0.1 விழுக்காடு எனப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்