தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் பெரிய குடும்பங்களுக்கு இருமடங்கு விலைக்கழிவு

2 mins read
14fe1742-0bf0-4056-9088-7dfb4dfa0c01
ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் மூன்று விழுக்காடாக உள்ள விலைக் கழிவு டிசம்பர் 31 வரை ஆறு விழுக்காடாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிக குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட, குறைந்த வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்கள் ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் அதிக விலைக்கழிவை அனுபவிக்கலாம்.

அந்த விலைச் சலுகை செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை நடப்பில் இருக்கும் என்று ஃபேர்பிரைஸ் குழுமம் இன்று (செப்டம்பர் 2) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

சாஸ் எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்டத்தின் நீலநிற மற்றும் ஆரஞ்சுநிற அட்டை வைத்திருப்போருக்கு 6 விழுக்காடு வரை விலைக் கழிவு வழங்கப்படும் என்று அது அறிவித்து உள்ளது. தற்போது அந்தக் கழிவு 3 விழுக்காடாக உள்ளது

SG60 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக விலைக்கழிவு இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளதாக குழுமம் கூறியுள்ளது.

18 வயதுக்கு உட்பட்ட மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டிருக்கும் சாஸ் அட்டைதாரர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும்.

இச்சலுகையை எல்லா ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் மற்றும் யூனிட்டி கடைகளில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அவர்கள் பெறலாம்.

எல்லா சிங்கப்பூரர்களும் தங்களுக்கான அத்தியாவசியத் தேவைகளைப் பெற்றிருப்பதை உறுதிசெய்ய தான் மேற்கொண்டிருக்கும் ஆக அண்மைய முயற்சி இது என ஃபேர்பிரைஸ் குழுமத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், பெரிய குடும்பங்களுக்கு அதிக உதவிகளைச் செய்து வரும் அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் விலைக் கழிவு வழங்கப்படுவதாக அது குறிப்பிட்டு உள்ளது.

இந்த நான்கு மாதச் சலுகையை அந்தக் குழுமம் ஃபேர்பிரைஸ் அறநிறுவனத்துடன் இணைந்து வழங்குகிறது.

குழுமம் எளிய மக்களுக்கான விலைக்கழிவை இரட்டிப்பாக்குவது இந்த ஆண்டில் இது இரண்டாவது முறை.

நீலநிற சாஸ் அட்டை வைத்துள்ள ஜினா டான் மூன்று பிள்ளைகளின் தாயார் ஆவார். தம்முடையதைப் போன்ற குடும்பங்களுக்கு ஒவ்வொரு சேமிப்பும் நீண்டகாலத்துக்கு உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஃபேர்பிரைஸ் கடைகளில் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் $140க்குப் பொருள் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்