‘என்டியுசி ஃபேர்பிரைஸ்’ பேரங்காடிகளை நடத்திவரும் ஃபேர்பிரைஸ் குழுமத்துக்கு, பொருள்களைக் கொண்டுசெல்லச் சாலைகளில் தானியக்க வாகனங்களை இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வாகனம் அந்த வாகனங்களுடன் செல்லத் தேவையில்லை.
தொலைவிலிருந்து கண்காணிக்கப்படும் தானியக்க வாகனங்களைப் பொருள் விநியோகத்துக்காகப் பொதுப் போக்குவரத்துச் சாலைகளில் இயக்குவதற்கு நிலப் போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியிருப்பது இதுவே முதன்முறை.
சீனாவின் ‘ஸெலோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் தானியக்க வாகனங்களைப் பயன்படுத்தவிருப்பதாகப் புதன்கிழமை (அக்டோபர் 8), ஃபேர்பிரைஸ் குழுமம் தெரிவித்தது.
ஜூ கூன், பெனோய் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விநியோக நிலையங்களுக்கு இடையே பொருள்களைக் கொண்டுசெல்ல அந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும். இரு நிலையங்களுக்கும் இடையிலான தொலைவு ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர்.
தளவாடத் துறைக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘ஸெலோஸ் Z10’ தானியக்க வாகனத்தின் கொள்ளளவு 1.5 டன் என்றும் அது 210 கிலோமீட்டர் வரை பயணம் செய்யும் திறன்கொண்டது என்றும் கூறப்பட்டது.
பழங்கள், காய்கறிகள், பொட்டலமிடப்பட்ட பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் போன்றவற்றை விநியோகிக்க அந்த வாகனம் பயன்படுத்தப்படும் என்று குழுமம் கூறியது.
ஃபேர்பிரைஸ் குழுமமும் ‘ஸெலோஸ்’ நிறுவனமும் செவ்வாய்க்கிழமை செய்துகொண்ட ஒப்பந்தத்தின் கீழ், மொத்தம் ஏறக்குறைய 30 தானியக்க வாகனங்களைக் குழுமம் பயன்படுத்தும். தற்போது அதனிடம் ஒரு தானியக்க வாகனம் உள்ளது. இம்மாத இறுதிக்குள் மேலும் இரு வாகனங்கள் பணியில் இணையும்.
தொடர்புடைய செய்திகள்
2024 அக்டோபர் முதல் இந்த வாகனத்துக்கான சோதனை ஓட்டம் நடைபெறுவதாகவும் அன்றாடம் பகலிலும் இரவிலும் பாதுகாப்பு வாகனம் உடன்வர, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தானியக்க வாகனங்களின் பயன்பாட்டால் குழுமத்தின் கரியமில வாயு வெளியேற்றம் ஆண்டுக்கு 27 டன் குறையும் என்று தெரிவிக்கப்பட்டது. பொருள்களை ஏற்றி, இறக்கும் பணிகளில் ஊழியர்கள் செலவிடும் நேரம் குறைவதால் இதர முக்கிய வேலைகளில் இனி அவர்கள் கவனம் செலுத்த முடியும் என்று அது கூறியது.