ஃபேர்பிரைஸ் குழுமத்தின் உணவு மீட்பு நடவடிக்கையை விரிவாக்குவதன் மூலம் அதிகமான குறைந்த வருமானக் குடும்பங்களுக்கும் மூத்தோருக்கும் காய்கறிகளும் பழங்களும் கிடைக்கும்.
கிட்டத்தட்ட ஈராண்டுகளாகச் செயல்பட்டு வரும் அந்நடவடிக்கையை ஆண்டிறுதிக்குள் 60 விநியோக மையங்களுக்கு விரிவுபடுத்த ஃபேர்பிரைஸ் குழுமம் எண்ணியுள்ளது.
குடியிருப்புப் பேட்டை உணவுப் பகிர்வுத் திட்டமே (NFS) உணவு மீட்பு நடவடிக்கை.
தோற்றக் குறைபாடுள்ள, கெட்டுப்போகாத காய்கறிகளையும் பழங்களையும் பேரங்காடிகளால் விற்க இயலாதபோது அவற்றை வீணாக்காமல், ஒன்றுதிரட்ட அத்திட்டம் தீட்டப்பட்டது.
அவ்வாறு திரட்டப்படும் காய்கறிகளும் பழங்களும் வசதிகுறைந்தோருக்கு அளிக்கப்படும்.
அந்தத் திட்டம் 2023 செப்டம்பர் மாதம் 15 விநியோக மையங்களுடன் தொடங்கியது.
தற்போது 51 மையங்களாக அது விரிவடைந்து உள்ளது.
மாதம் ஒன்றுக்கு இரண்டு டன் எடையுள்ள காய்கறிகளும் பழங்களும் அந்த மையங்களில் விநியோகிக்கப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
திட்டம் அறிமுகம் கண்டதுமுதல் இதுவரை ஏறத்தாழ 30 டன் காய்கறிகளும் பழங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அவற்றின் மூலம் ஆண்டுக்கு 25,000க்கும் மேற்பட்டோர் பலனடைந்து வருகின்றனர்.
வளங்கள் குறைந்த சிங்கப்பூருக்கு இதுபோன்ற உணவுப் பகிர்வு நடவடிக்கைகள் அவசியமானவை என்று சமூகச் சேவைகள் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ குறிப்பிட்டார்.
பூன் லே அவென்யூவில் புதன்கிழமை (ஜூலை 23) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், “சிங்கப்பூரர்கள் ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து பணியாற்றும் ஆர்வம் கொண்டவர்கள். ஈடுஇணையற்ற சமூக ஒற்றுமை இருப்பதன் காரணமாகவே இதுபோன்ற திட்டங்களை நம்மால் செயல்படுத்த முடிகிறது,” என்றார்.
உணவுப் பகிர்வுத் திட்டம் செயல்படும் விதம் குறித்து திரு லீ விளக்கினார்.
“விளைபொருள்களை வழங்க தனது கட்டமைப்புகளையும் பேரங்காடிகளையும் ஃபேர்பிரைஸ் குழுமம் பயன்படுத்துகிறது. களத்தில் உள்ள குழுக்கள், அந்தப் பொருள்கள் விநியோகிக்கப்படும் நிகழ்வுகள் பற்றி தேவையுள்ளோரிடம் விளம்பரப்படுத்தும்.
“தொண்டூழியர்கள் அந்தப் பொருள்களைச் சேகரித்து விநியோக மையங்களை உருவாக்குவார்கள்,” என்று கல்வி அமைச்சருமான டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.