சளிக் காய்ச்சல், இருமல் மருந்துகளின் விற்பனை கடந்த வாரம் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஃபேர்பிரைஸ் பெனடால், நியூரேஃபன் மாத்திரைகளின் விற்பனையைக் கட்டுப்படுத்தி உள்ளது.
ஒரு வாடிக்கையாளர் பெனடால், நியூரேஃபென் பொருள்களைச் சேர்த்து அதிகபட்சம் நான்கை மட்டுமே வாங்க முடியும்.
இந்த விதிமுறை வியாழக்கிழமை (டிச. 22) நடப்புக்கு வந்ததாகவும் அது குறித்த அறிவிப்புகள் கடைகளில் வைக்கப்பட்டதாகவும் ஃபேர்பிரைஸ் பேச்சாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தார்.
தங்களின் சொந்தத் தேவைகளுக்கு ஏற்றவாறு மட்டுமே அவற்றை வாங்கும்படி பேச்சாளர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
அந்த இரண்டு பெயர்களைத் தவிர, மற்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மாற்று சளிக் காய்ச்சல், இருமல் மருந்துகள் தங்களது கடைகளில் விற்கப்படுவதாக அவர் கூறினார்.
பெனடால், நியூரோஃபன் இரண்டும் மக்களிடையே பிரபலமான சளி, காய்ச்சல் மருந்துத் தயாரிப்புகளாகும். இரண்டும் மருந்துச் சீட்டுகள் இல்லாமலும் பரவலாகவும் கிடைக்கக்கூடியவை.
மருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் சில நிறுவனங்களின் தயாரிப்புகள் கடைகளில் மீண்டும் கிடைக்க கூடுதல் காலம் எடுக்கலாம் என்று சுகாதார அமைச்சு கடந்த புதன்கிழமை கூறியிருந்தது.
மற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் அதேபோன்ற மருந்துகளையும் பொதுமக்கள் பரிசீலிக்க வேண்டும் என்று அது தெரிவித்தது.

