ஃபேர்பிரைஸ் பற்றுச்சீட்டு மோசடி: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

ஃபேர்பிரைஸ் பற்றுச்சீட்டு மோசடி: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Nov 2026 - 8:06 pm

1 mins read

ஃபேர்பிரைஸ் பற்றுச்சீட்டு வென்றுள்ளதாக வரும் திடீர் அழைப்புகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

“ஃபேர்பிரைஸ், இன்கம் காப்பீடு, என்டியுசி யூனியன் பெயர்களில் மோசடிக்காரர்கள் செயல்படுகின்றனர்,” என்று ஃபேர்பிரைஸ் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

மோசடிக்காரர்கள், தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் வழியாகத் தொடர்புகொண்டு பரிசுகள் வென்றுள்ளதாகப் பொய் கூறுகின்றனர். சந்தேகத்திற்குரிய இணைப்புகளை அழுத்தவும், தனிப்பட்ட விவரங்கள், வங்கித் தகவல்களை வழங்கவும் பொதுமக்களை வற்புறுத்துகின்றனர்.

“இதுபோன்ற அழைப்புகளுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை,” என ஃபேர்பிரைஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்கள், கடன் அட்டைத் தகவல்கள், ஒருமுறை கடவுச்சொல் ஆகியவற்றை ஃபேர்பிரைஸ் ஒருபோதும் கேட்காது என்றும் அது தெளிவுபடுத்தியது.

சந்தேகமிருந்தால் ஃபேர்பிரைஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம், சமூக ஊடகப் பக்கங்களைச் சரிபார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

புகார்களுக்கு 6380-5858 என்ற எண்ணிலோ general.feedback@fairprice.com.sg என்ற மின்னஞ்சலிலோ தொடர்புகொள்ளலாம் என்று ஃபேர்பிரைஸ் கூறியது.

ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியான காவல்துறை அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் 19,644ஆக இருந்த மோசடி வழக்குகள் 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் 16,821ஆக 14 விழுக்காடு குறைந்துள்ளன.

47,000க்கும் மேற்பட்ட மோசடித் தொலைப்பேசி எண்கள், 37,500 வாட்ஸ்அப் எண்கள் முடக்கப்பட்டன. இருப்பினும், பத்தில் எட்டுப் பேர் தங்களது பணத்தை மோசடிக்காரர்களிடம் இழக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்