ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தேர்வுசெய்யப்பட்ட அன்றாட அத்தியாவசிய பொருள்களை சலுகை விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.
அடுத்த மூன்றரை மாதங்களுக்கு, ஃபேர்பிரைஸ் செயலியில் உள்ள 400க்கும் மேற்பட்ட பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் $2,000க்குமேல் சேமிக்கலாம். ஃபேர்பிரைஸ் குழுமம் வியாழக்கிழமை (ஜூன் 13) வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்தது.
அனைத்து ஃபேர்பிரைஸ், ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட், ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா பேரங்காடிகளில் காசாளர் முகப்புகளில் பற்றுச் சீட்டு தாள்கள் கிடைக்கும்.
உறைய வைக்கப்பட்ட உணவு வகைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், தனிப்பட்ட பராமரிப்புப் பொருள்கள் போன்ற பிரிவுகளில் உள்ள பொருள்களை வாங்க இப்பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்.
விலைச் சலுகை நடப்பில் உள்ள காலத்தில் ஒரு பற்றுச்சீட்டை எத்தனை முறை பயன்படுத்த முடியும் என்பதில் வரம்பு எதுவும் இல்லை. ஒரே பரிவர்த்தனையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பற்றுச்சீட்டுகளையும் பயன்படுத்தலாம்.
வீட்டு உபயோகப் பொருள்களுக்கும் மின்னியல் சாதனங்களுக்கும் இவ்வாண்டு இணையத்தில் பிரத்தியேகமான 10 பற்றுச்சீட்டுகளைத் தேர்வுசெய்ததாக ஃபேர்பிரைஸ் குழுமம் கூறியது.
இந்த விலைச் சலுகை திட்டம் 2021ல் அறிமுகம் செய்யப்பட்டது. சென்ற ஆண்டு 1.5 மில்லியன் பற்றுச்சீட்டுகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. 2022ல் இருந்ததைவிட இந்த எண்ணிக்கை ஏழு மடங்கு அதிகம்.
பால், ஓட்ஸ், திசுத் தாள் போன்ற பொருள்கள் வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்ததாக ஃபேர்பிரைஸ் குழுமம் சொன்னது.