சிங்கப்பூரில் உள்ள குறைந்தது நான்கு உள்நாட்டுப் பண்ணைகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள், இனி ஃபேர்பிரைஸ் குழுமப் பேரங்காடியில் விற்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.
ஃபேர்பிரைசின் வழக்கமான பொருள்கள் குறித்த மதிப்பாய்வின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு விலைக்குத் தகுந்த பயன்மிக்க பொருள்களை வழங்குவதற்கும், நாட்டின் உணவு மீள்திறனை மேம்படுத்துவதற்காக உள்ளூர் உற்பத்தியாளர்களை ஆதரிக்கும் நாட்டின் முயற்சிக்கும் இடையே நிலவும் வர்த்தகப் போட்டியை இந்நடவடிக்கை காட்டுவதாகத் தொழில்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
பாதிக்கப்பட்ட நகர்ப்புறப் பண்ணைகளில் ஆர்டிசன் கிரீன் (Artisan Green), எஸ்ஜி வெஜ் ஃபார்ம்ஸ் (SG Veg Farms), சஸ்டெனீர் (Sustenir), நியோ தியூவில் உள்ள நெடாஃபார்ம் ஆகியவை அடங்கும்.
2019ஆம் ஆண்டு முதல் ஆசியக் கீரை வகைகள், கேல் போன்ற காய்கறிகளை அப்பண்ணைகள் விநியோகம் செய்து வந்தன.
உள்ளூர் பண்ணைகளில் மிக முக்கியமான சஸ்டெனீர் பண்ணை, தமது ஏழு வகையான விளைபொருள்களில் ஒரு பகுதி ஃபேர்பிரைஸ் விற்பனைப் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதை உறுதிப்படுத்தியது.
உள்ளூர் உற்பத்தியாளர்களில் ஒருவராக, பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்கள் உள்நாட்டுப் புதிய விளைபொருள்களுக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளித்து ஆதரவளிக்கும் என நம்புவதாக அதன் பேச்சாளர் கூறினார்.
இது குறித்து ஃபேர்பிரைஸ் குழுமம் கூறுகையில், பயனீட்டாளரின் மாறிவரும் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும், சிறந்த விலையில் சரியான காய்கறி வகைகளை வழங்குவதற்கும் கடைகளில் இருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டு மதிப்பாய்வு செய்யப்படுவதாகக் குறிப்பிட்டது.
மேலும், “வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில், தரமான புதிய விளைபொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதே நேரத்தில், உள்ளூர் விவசாயிகளுடனான எங்கள் நீண்டகாலப் பங்காளித்துவத்தின் மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஆதரிப்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என ஃபேர்பிரைஸ் குழுமப் பேச்சாளர் தெரிவித்தார்.

