ஃபேர்பிரைஸ் குழுமம் தனது சரக்குப் போக்குவரத்துக்கு ஓட்டுநரில்லா தானியக்க வாகனங்களைப் பயன்படுத்தும் சோதனை முயற்சிக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்து உள்ளது.
உற்பத்தித்திறனை மேம்படுத்தி கரிம வெளிப்பாட்டைக் குறைப்பதில் கவனம் செலுத்தும் ஃபேர்பிரைஸ் குழுமம், அந்த நோக்கங்களின் அடிப்படையில் ஓட்டுநரில்லா வாகனங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக வியாழக்கிழமை (அக்டோபர் 24) அக்குழுமம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சிங்கப்பூரில் சரக்குப் போக்குவரத்துக்காக பொதுச் சாலைகளில் தானியக்க வாகனங்களைப் பயன்படுத்தும் முதல் நிறுவனமாக தான் விளங்க இருப்பதாக அக்குழுமம் கூறியுள்ளது.
தீவு முழுவதும் கிளைகளைப் பரப்பி உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடி, பொதுச் சாலையில் தானியக்க வாகனங்களை சோதித்துப் பார்க்கும் முதற்கட்ட நடவடிக்கையை அக்டோபர் 18ஆம் தேதி தொடங்கியது.
பகலிலும் இரவிலும் நடைபெறும் அந்தச் சோதனை ஓட்டத்தில் தானியக்க வாகனத்துடன் பாதுகாப்பு வாகனம் ஒன்றும் செல்லும்.
தானியக்க வாகனச் சாலைப் பாதுகாப்புக்கான நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தரநிலையை இந்த முதற்கட்ட சோதனை பூர்த்தி செய்த பின்னர் அடுத்தகட்ட சோதனை முயற்சியில் ஃபேர்பிரைஸ் குழுமம் ஈடுபடும்.
இரண்டாம் கட்ட சோதனை ஓட்டத்தின்போது தானியக்க வாகனத்துடன் பாதுகாப்பு வாகனம் அதற்குத் துணையாகச் செல்லாது.
தொடர்புடைய செய்திகள்
ஆணையம் தனது இறுதிக்கட்ட அனுமதியை அளித்த பின்னர் சோதனை ஓட்டம் முழுமையாக நிறைவுபெறும்.
அந்த அனுமதிக்குப் பின்னர், சிங்கப்பூரில் மனிதக் கண்காணிப்பின்றி தானியக்க வாகனத்தில் சரக்குகளை அனுப்பும் பணியை குழுமம் தொடங்கும்.
தானியக்க வாகனங்களை தனது பணியில் ஈடுபடுத்த ‘ஸெலோஸ் டெக்னாலஜி’ என்னும் தானியக்க வாகனங்களுக்கான தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்துவதாக குழுமம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவுற்றதும் ‘ஸெலோஸ் ஸெட்10எஸ்’ (Zelos Z10s) என்னும் தானியக்க வாகனத்தை ஃபேர்பிரைஸ் குழுமம் தனது போக்குவரத்தில் இணைத்துக்கொள்ளும்.
ஏறத்தாழ இரண்டு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திற்கு அந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும்.
பினோய் மற்றும் ஜூ கூன் விநியோக நிலையங்களுக்கு இடையில் சென்று வரும் அந்த தானியக்க வாகனம் 1,500 கிலோகிராம் வரையிலான சரக்குகளைச் சுமந்து செல்லக்கூடியது.
அந்த வாகனத்திற்குள் 10 கியூபிக் மீட்டர் அளவுக்கு சரக்குகளை அடுக்கி வைப்பதற்கான இடம் இருக்கும்.
முழுக்க முழுக்க மின்கலத்தில் இயங்கும் தானியக்க வாகனத்திற்கு 210 கிலோமீட்டர் தூரம் ஓடிய பின்னர் மின்னூட்டம் செய்ய வேண்டி இருக்கும்.


