ஃபைஷால் இப்ராஹிம் மீண்டும் கல்வித்துறைக்குத் திரும்பக்கூடும்

ஃபைஷால் இப்ராஹிம் மீண்டும் கல்வித்துறைக்குத் திரும்பக்கூடும்

2 mins read
191894ee-9cde-4642-8565-72dde2b59e8e
முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
Google News Preferred Icon

முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகித்த முன்னாள் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம், கல்வித்துறைக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்துடன் கலந்துரையாடி வருகிறார்.

‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்தார்.

உள்துறை மூத்த துணை அமைச்சராகவும் இருந்த ஃபைஷால், பொதுமக்களில் ஒருவரான பெண்ணுடன் தமது உரையாடல்களைக் கையாண்ட விதத்தில் ஏற்பட்ட ‘தவறான முடிவெடுத்தல்’ காரணமாக, ஜூலை 20ஆம் தேதி தமது அரசியல் பதவியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.

அவருக்குப் பிறகு ஸாக்கி முகமது முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரானார்.

ஃபைஷால் அரசியல் பதவிக்கு வருவதற்கு முன்பு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சொத்துச் சந்தைத் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 2012ல் போக்குவரத்து அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராகப் பணியாற்றினார்.

அரசியலில் நுழைவதற்கு முன்பு ஒரு கல்வியாளராக இருந்த அவர், தனது இளங்கலைப் பட்டப்படிப்பிற்காக சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். பின்னர் சொத்துச் சந்தைத் துறையில் தனது முதுகலைப் பட்ட வகுப்பில் முதலிடம் பெற்றார்.

பின்னர், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கல்வி உதவித்தொகையின்கீழ் மேலாண்மை அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

தொடர்ந்து அவர் அரசியலில் இணைந்து, 2006ல் மக்கள் செயல் கட்சியின் மரின் பரேட் குழுத் தொகுதி அணியின் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், நீ சூன் குழுத் தொகுதிக்குக் கூடுதலாக மூன்று முறை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2025 மே மாதப் பொதுத் தேர்தலுக்காக அவர் மரின் பரேட் குழுத் தொகுதிக்குத் திரும்பினார். அங்கு அவரது அணி போட்டியின்றி வெற்றி பெற்றது.

தேர்தலுக்குப் பிறகு நடந்த அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, மசகோஸ் ஸுல்கிஃப்லிக்குப் பதிலாக ஃபைஷால், தற்காலிக அமைச்சராக நியமிக்கப்பட்டு, உள்துறைக்கான மூத்த துணை அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றார்.

அதற்கு முன்பு, 2020ல் ஃபைஷால் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்
குழுத் தொகுதிநாடாளுமன்ற உறுப்பினர்சொத்துச் சந்தை