காக்கி புக்கிட்டிலும் தெம்பனிசிலும் வசிக்கும் அனைவர்க்கும் சமமான முறையில் சேவையாற்ற தெம்பனிஸ் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஃபைசல் மனாப் தெரிவித்திருக்கிறார்.
தெம்பனிஸ் 1 கடைத்தொகுதியில் தம் அணியினருடன் மேற்கொண்ட தொகுதி உலாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு ஃபைசல், “கட்சியைச் சேர்ந்த அனைவரும் அனைவர்க்கும் நியாயமாகவும் சமமாகவும் பணியாற்றுவோம் என்று பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்கெனவே பல்லாயிரம் பேரின் முன்னிலையில் வாக்குறுதி கொடுத்துள்ளோம்,” என்றார்.
இது குறித்த சந்தேகத்தைக் களைய, காக்கி புக்கிட் வட்டாரவாசிகளைப் பேட்டி எடுக்கும்படியும் திரு ஃபைசல் கேட்டுக்கொண்டார்.
தெம்பனில் வட்டாரவாசிகள் தம்மிடம் இந்த விவகாரம் குறித்துக் கவலையை வெளிப்படுத்தியதாக முஸ்லிம் விவகார அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்தது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குத் திரு ஃபைசல் இவ்வாறு பதிலளித்தார்.
இன, சமய அடிப்படையில் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி ஊக்குவிக்கும் சமூக ஊடகப் பதிவுகள் அண்மையில் வெளிவந்தன.
வெளிநாட்டிலிருந்து மூவர் செய்திருந்த பதிவுகளைச் சிங்கப்பூர் அதிகாரிகள் முடக்கியுள்ளபோதும் சிங்கப்பூரர்களால் செய்யப்பட்ட இது போன்ற பதிவுகள் இணையத்தில் தொடர்ந்து வலம்வருகின்றன.
குறிப்பாக, திரு ஃபைசல் மனாப்பிற்கு ஆதரவாகச் சமய போதகர் நூர் டிரோஸ் வெளியிட்ட பதிவுகள், அண்மையில் அதிகாரிகளின் கவனத்தைப் பெற்றுள்ளன. முஸ்லிம்களின் நலனுக்காக அமைச்சர் மசகோஸ் போதிய அளவில் குரல்கொடுக்கவில்லை என்று சில பதிவுகள் குற்றஞ்சாட்டுகின்றன.
தொகுதி உலா குறித்துக் கேட்டபோது தெம்பனிஸ் வட்டாரவாசிகள் தங்களை நன்முறையில் வரவேற்பதாகத் திரு ஃபைசல் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“எங்களுக்குக் களைப்பாக இருந்தாலும் வட்டாரவாசிகளின் பாசத்தாலும் ஆர்வத்தாலும் கூடுதல் தெம்பைப் பெறுகிறோம். வாய்ப்பு கிடைத்தால் அவர்களுக்குச் சேவையாற்ற ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்,” என்றார் அவர்.

