கெம்பாங்கான் குடியிருப்பாளர்களுக்குச் சேவை தொடரும்: சியா கியன் பெங்

கெம்பாங்கான் குடியிருப்பாளர்களுக்குச் சேவை தொடரும்: சியா கியன் பெங்

2 mins read
குழுத்தொகுதியின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் சேவையாற்ற உறுதிகூறினார்
b1d4fb8f-ae7d-4437-ae15-892f71aaec26
செய்தியாளர் சந்திப்பில் (இடமிருந்து) மரீன் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டயானா பாங், நாடாளுமன்ற நாயகருமான சியா கியன் பெங், சமுதாயம், குடும்ப மேம்பாடு, உள்துறைத் துணையமைச்சருமான கோ பெய் மிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் பதவியிலிருந்து திரு ஃபைஷால் இப்ராஹிம் விலகியுள்ள நிலையில், குழுத்தொகுதியின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் இணைந்து, திரு ஃபைஷால் சேவையாற்றிய கெம்பாங்கான் குடியிருப்பாளர்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றுவர் என்று திரு சியா கியன் பெங் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற நாயகரும் மரீன் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சியா கியன் பெங் திங்கட்கிழமை (ஜூலை 20) நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

“கெம்பாங்கான் பகுதியின் மக்கள் சந்திப்புக் கூட்டங்களில் எப்போதும் நால்வரில் ஒருவராவது இருப்போம்,” என்று அவர் உறுதியளித்தார்.

முறையீடுகளையும் மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செயல்பாடுகளையும் அவர்கள் தொடர்ந்து கையாள்வர் என்றும் திரு சியா குறிப்பிட்டார்.

திரு ஃபைஷால் தமது தொகுதி மக்களிடமும் அடித்தளத் தலைவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாகவும் திரு சியா உணர்வுபொங்கப் பகிர்ந்துகொண்டார்.

இதனால் தாம் சேவையாற்றி வரும் பிரேடல் ஹைட்ஸ் மக்களுக்குத் தரும் ஆதரவில் எவ்விதக் குறையும் இருக்காது என அவர் உறுதியளித்தார்.

திரு ஃபைஷாலைத் தமக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தெரியும் என்று குறிப்பிட்ட திரு சியா, “இந்த இக்கட்டான சூழலில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய கால அவகாசத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

அத்தொகுதியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரும் சமுதாயம், குடும்ப மேம்பாடு, உள்துறைத் துணையமைச்சருமான கோ பெய் மிங், கெம்பாங்கான் மக்களுடன் திரு ஃபைஷால் அன்போடு பழகினார் என்று தம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“மலாய்-முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திலும் நலனிலும் திரு ஃபைஷால் கொண்டிருந்த ஆழமான அக்கறையைப் பார்த்திருக்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

தமது செயலுக்குப் பொறுப்பேற்று, பதவி விலகியதன் மூலம் திரு ஃபைஷால் சரியான செயலைச் செய்துள்ளார் என்றும் தங்கள் குழு அதற்காக அவரை மதிப்பதாகவும் துணையமைச்சர் கூறினார்.

குழுவிற்கு மிகுந்த ஆதரவாக இருந்த ஓர் உறுப்பினர் என்று திரு ஃபைஷால் மக்களுக்கு ஆற்றிய சேவையை அங்கீகரித்தார் குழுத்தொகுதிக்கான மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங்.

குறிப்புச் சொற்கள்