முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகித்த முன்னாள் அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம், பெண் ஒருவருக்கு அனுப்பிய குறுந்தகவல்கள் நன்கு ஆராயப்பட்ட பிறகு, அவை முறையற்றவை, கேள்விக்குரியவை என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் கா. சண்முகம் புதன்கிழமை (ஜூலை 22) கூறியுள்ளார்.
இணைப் பேராசிரியர் ஃபைஷாலின் தரப்பு பதிலளிக்கத் தகுந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் திரு சண்முகம் குறிப்பிட்டார். இணைப் பேராசிரியர் ஃபைஷால் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவோ அமைச்சராகவோ பொறுப்பு வகிக்க முடியாது என்ற முடிவுக்கு அவரே வந்ததாகவும் திரு சண்முகம் சுட்டினார்.
“அவரின் நோக்கம் எதுவாக இருந்தாலும் நாம் ஆதாரத்தையும் தகவல்களையும் கருத்தில்கொள்ள வேண்டும்,” என்று அமைச்சர் சண்முகம் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார். இணைப் பேராசிரியர் ஃபைஷாலுக்கும் பெண் ஒருவருக்கும் இடையிலான குறுந்தகவல் பரிமாற்றத்தைப் பற்றி அவர் பேசினார். பெயர் வெளியிடப்படாத அப்பெண் பொதுமக்களில் ஒருவர்.
பதவி விலகிய ஃபைஷால்
அந்த விவகாரத்தைத் தொடர்ந்து இணைப் பேராசிரியர் ஃபைஷால் திங்கட்கிழமை (ஜூலை 20) அரசியலிலிருந்து விலகிக்கொண்டார். தமக்கும் அந்தப் பெண்ணுக்கும் உடல்ரீதியாக எந்த உறவும் இல்லை என்றும் தங்களுக்கிடையிலான தொடர்புகளை அப்படிப்பட்ட உறவுக்குக் கொண்டுசெல்லும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் அவர், பிரதமர் லாரன்ஸ் வோங்குக்கு அனுப்பிய பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இணைப் பேராசிரியர் ஃபைஷாலுக்கும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் இடையே இணையத்தில் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகத் திரு சண்முகம் கூறினார்.
தொடர்பைத் திடீரெனத் துண்டித்தால் அப்பெண் எதிர்மறையாக நடந்துகொள்வார் என்று திரு ஃபைஷால் கவலைப்பட்டதாய்த் தெரிவித்ததாக அமைச்சர் சண்முகம் விளக்கினார்.
“எனினும், நன்கு ஆராயப்பட்ட பிறகு அவர் பெண்ணுக்குத் தந்த பதில்கள் முறையற்றவை, கேள்விக்குரியவை என முடிவெடுக்கப்பட்டது,” என்றும் அவர் குறிப்பிட்டார். இணைப் பேராசிரியர் ஃபைஷால் நடந்துகொண்ட விதம், சம்பந்தப்பட்ட பெண்ணைத் தொடர்புகொள்ளும் நோக்கத்துடன் இருந்ததுபோல் தெரிந்ததாகத் திரு சண்முகம் சொன்னார்.
பெண்ணின் தரப்பு
“பெண் அவ்வாறுதான் அதனைப் புரிந்துகொண்டார். அதனால் தான் தொடர்ந்து இணையக் குறுத்கவல் உரையாடலில் ஈடுபட ஊக்குவிக்கப்படுவதாக அப்பெண் கருதினார்,” என்றார் அவர்.
எனினும், இணைப் பேராசிரியர் ஃபைஷால், பெண்ணுடன் இணையத்தில் தொடர்புகொள்வதை நிறுத்த முயன்றபோது அவர் சினமடைந்ததாகவும் திரு சண்முகம் குறிப்பிட்டார். தனக்கும் இணைப் பேராசிரியர் ஃபைஷாலுக்கும் இடையிலான குறுந்தகவல்களில் சிலவற்றையும் குறுந்தகவல்களில் இடம்பெற்ற படங்களையும் அப்பெண் பின்னர் பிரதமர் வோங்குக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைத்தார்.
இணைப் பேராசிரியர் ஃபைஷால் தனக்குத் தொந்தரவு இழைத்ததாக அவர் குற்றஞ்சாட்டினார். அப்பெண் தனக்குத் தொந்தரவு இழைத்ததாக ஃபைஷாலும் குற்றஞ்சாட்டியதாக திரு சண்முகம் தெரிவித்தார்.
அதனால்தான் இந்த விவகாரம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

