உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் நீ சூன் குழுத்தொகுதியில் இருந்து மரின் பரேட்-பிராடல் ஹைட்ஸ் குழுத்தொகுதிக்கு மாற இருப்பதாக அறிவித்து உள்ளார்.
வரும் பொதுத் தேர்தலில் அந்தக் குழுத்தொகுதிக்கான மக்கள் செயல் கட்சி (மசெக) அணியில் இணைந்து போட்டியிட இருப்பதாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) காலை அவர் கூறினார்.
ஈசூன் ஸ்திரீட் 72, புளோக் 747ல் உள்ள காப்பிக்கடை ஒன்றில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
தொகுதி மாறி போட்டியிடுமாறு பிரதமர் லாரன்ஸ் வோங் தம்மைக் கேட்டுக்கொண்டதாக அப்போது இணைப் பேராசிரியர் ஃபைஷால் தெரிவித்தார்.
நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்ட அவர், அண்மையில் மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் வட்டாரத்தில் தொகுதி உலா மேற்கொண்டதைக் காணமுடிந்தது.
வரும் தேர்தலில் அவர் அந்தத் தொகுதியில் போட்டியிடக்கூடும் என்ற கணிப்பு அப்போது எழுந்தது.
அதனை திரு ஃபைஷால் தற்போது உறுதி செய்துள்ளார்.
நீ சூன் குழுத்தொகுதியில் நீ சூன் மத்திய தொகுதியை அவர் இதுவரை பிரதிநிதித்து வந்தார்.
தொடர்புடைய செய்திகள்
வரும் தேர்தலில் அவருக்குப் பதிலாக அந்தத் தொகுதியில் போட்டியிட இருவரின் பெயர் அடிபடுகிறது.
அவர்களில் ஒருவர் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் இயக்குநரான திருவாட்டி கோ ஹன்யான்.
மற்றொருவர், முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரான சையத் ஹாருன் அல்ஹாப்சி.
“நீ சூன் குடியிருப்பாளர்களுடன் இணைந்து வளர நான் கொடுத்து வைத்தவன். கடந்த 14 ஆண்டு காலமாக மேலும் மேலும் வளர்ந்தோம்; வலுவடைந்தோம். அது ஓர் அழகான பயணம்.
“மரின் பரேடுக்கு மாறுவது தாய்வீட்டுக்குத் திரும்பிச் செல்வதைப் போன்றது,” என்றார் திரு ஃபைஷால்.
56 வயதாகும் திரு ஃபைஷால், கடந்த 2006ஆம் ஆண்டு அரசியலில் அடி எடுத்து வைத்தார். மரின் பரேட் குழுத்தொகுதியில் மசெக அணியுடன் இணைந்து முதன்முறை அவர் தேர்தல் களம் கண்டார். 2011 பொதுத் தேர்தலில் அவர் நீ சூன் குழுத்தொகுதியில் போட்டியிட்டார்.

