ஃபைஷால் பதவி விலகல் தேவையற்றது: முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து

ஃபைஷால் பதவி விலகல் தேவையற்றது: முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து

3 mins read
d2528175-b701-4ba2-b37c-49ff49e6a6f5
திரு கெல்வின் செங். - கோப்புப் படம்: எஸ்பிஎச் மீடியா

இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் தனிப்பட்ட காரணங்களுக்காக அரசியல் பதவி,  நாடாளுமன்ற உறுப்பினர், மக்கள் செயல் கட்சி உறுப்பினர் என அனைத்துப் பொறுப்புகளிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது பதவி விலகல் முடிவு தேவையற்றது என்று முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கெல்வின் செங் தெரிவித்துள்ளார். 

இந்தத் தன்னிச்சையான பதவி விலகல் முடிவு குறித்துத் திங்கட்கிழமை (ஜூலை 20) தமது கருத்தைப் பகிர்ந்துள்ள திரு செங், அவர்களுக்குள் பரிமாறிக்கொள்ளப்பட்ட கருத்துகளில் எவ்வித நேரடித் தொடர்போ எல்லை மீறிய உறவோ இல்லாத பட்சத்தில், திரு ஃபைஷால் அவரது பதவியைத் துறக்க வேண்டிய அவசியமில்லை,’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒலிக்கும் ஆதரவுக் குரல்

முன்னாள் தற்காலிக அமைச்சரின் பண்புநலன், செயல்பாடு குறித்தும் கருத்துரைத்த திரு செங், “திரு ஃபைஷால் சிறந்த மனிதர்; ஒருவர் சந்திக்கக்கூடிய மிகச்சிறந்த, எளிமையான, நட்பான ஒரு நபர். மனிதர்களுக்கே உரிய சிறு தவறுகளுக்காக, ஒரு சிறந்த அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினரை நாம் இழக்க நேரிடுவதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் மக்கள் செயல் கட்சியின்  கொள்கைகள் குறித்துச் சுட்டிய  திரு செங், “மசெக-வின் இந்த ‘அதி-தூய்மையான, புனிதர் போன்ற’ அணுகுமுறை, நீண்டகால அடிப்படையில் அவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்,” என்றும் பதிவிட்டுள்ளார். மரீன் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதிக்குத் திரு ஃபைஷால் சிறுபான்மையின வேட்பாளராகப் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடைத்தேர்தல்

சிறுபான்மையினப் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதற்காகவே குழுத்தொகுதிகள் உருவாக்கப்பட்டன என்பதையும் நினைவூட்டிய செங், தற்போது மரீன் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் சிறுபான்மையின நாடாளுமன்ற உறுப்பினர் விலகியுள்ளதால், அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமா என்ற கேள்வியையும் தமது சமூக ஊடகப் பதிவில் எழுப்பியுள்ளார்.

குழுத்தொகுதிகளில்  இடைத்தேர்தல்: முந்தைய வரலாறு

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் சிறுபான்மையின மக்களின் குரல் ஒலிப்பதை உறுதிசெய்யும் நோக்குடன், கடந்த 1988 பொதுத்தேர்தலின் போது ‘குழுத்தொகுதி’ முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இருப்பினும், தற்போதைய சட்டவிதிகள், மேலும் முந்தைய வரலாறுகளின்படி, ஒரு குழுத்தொகுதியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் விலகினாலும் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயமில்லை.

அண்மைய சம்பவங்களில் சிறுபான்மையின நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியபோதும் இடைத்தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

நாடாளுமன்றத்தில் தவறான தகவல் அளித்த விவகாரத்தில் செங்காங் குழுத்தொகுதிக்கான பாட்டாளிக் கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் 2021ல் விலகியபோது, அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசல் மனாப் அவரது பணிகளைக் கவனிக்க உதவினார். இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை.

அதேபோல, 2024ல் லஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சர், வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளிலிருந்து திரு ஈஸ்வரன் விலகினார்.

அப்போது, அமைச்சர் டெஸ்மண்ட் லீ தலைமையிலான குழுவினர் குடியிருப்பாளர்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றுவதாக அறிவித்தனர். அங்கும் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை.

தனித்தொகுதிகளின் நிலை

எனினும் தனித்தொகுதிகளைப் பொறுத்தவரை, சூழல் வேறாக இருந்துள்ளது.

இதற்கு முன்னதாக, பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யாவ் ஷின் லியோங், மசெகவின் முன்னாள் நாடாளுமன்ற நாயகர் மைக்கல் பாமர், அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஓங் ஆகியோர் தனித்தொகுதிகளில் இருந்து விலகியபோது ஹவ்காங், பொங்கோல் ஈஸ்ட், புக்கிட் பாத்தோக் என அந்தந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டு, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
பதவி விலகல்சிங்கப்பூர்நாடாளுமன்ற உறுப்பினர்மக்கள் செயல் கட்சி