தொடக்கப்பள்ளியில் மகளைச் சேர்ப்பதற்காகப் போலியான வீட்டு முகவரியைக் கொடுத்ததாக நம்பப்படும் பெண்மீது நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 5) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அரசாங்க ஊழியரிடம் போலியான தகவல் கொடுத்ததற்கு ஒரு குற்றச்சாட்டையும் தேசியப் பதிவேட்டுச் சட்டத்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளையும் அந்த 41 வயது பெண் எதிர்நோக்குகிறார்.
பிள்ளையின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகப் பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை.
2023இல் தொடக்கநிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையின்போது பள்ளித் தலைமையாசிரியரிடமும் துணைத் தலைமையாசிரியரிடமும் 2024 ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் வரை போலித் தகவல்களைக் கொடுத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.
குற்றத்தை ஒப்புக்கொள்ளவிருக்கிறேன் என்றும் தற்காப்பு வழக்கறிஞரை நாடப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.
அரசாங்க ஊழியரிடமும் போலித் தகவல்களைக் கொடுத்த குற்றத்திற்கு அதிகபட்சம் ஈராண்டு வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தொடக்கநிலை முதலாம் ஆண்டில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக போலியான முகவரியைக் கொடுக்கும் பெற்றோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வியமைச்சு அதன் இணையப்பக்கத்தில் தெரிவித்தது.
மாணவர் சேர்க்கையின்போது போலியான முகவரியைப் பெற்றோர் கொடுத்தாலோ கொடுத்த தகவலை நிரூபிக்க முடியாவிட்டாலோ அத்தகையோரின் பிள்ளைகள் வேறு பள்ளிக்கூடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் அது குறிப்பிட்டது.

