மின்னிலக்க நாணயங்கள் உள்ளிட்ட முதலீட்டு மோசடிகளிலிருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
குறிப்பாகச் சமூக ஊடகங்களில் சிங்கப்பூர் அரசியல் தலைவர்களின் பெயர்களைக் கொண்டு வரும் பதிவுகளை நம்ப வேண்டாம் என்று அது கேட்டுக்கொண்டது.
சிங்கப்பூரில் வரும் மே 3ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் அரசியல் சார்ந்த செய்திகள் அதிகம் வரும். இதைப் பயன்படுத்தி மோசடிக் கும்பல்கள் அரசியல் தலைவர்களின் படங்களைப் பதிவிட்டு மோசடி வேலைகளில் ஈடுபடக்கூடும்.
அரசியல் தலைவர்களைக் கொண்டு வரும் விளம்பரங்களை அழுத்தினால் அவை போலியான இணையத்தளத்திற்கு இட்டுச்செல்லும். அதில் தனிநபர் தகவல்கள் உள்ளிட்டவை கேட்கப்படும்.
பின்னர் வங்கி உள்ளிட்ட முக்கிய விவரங்களைப் பெற்று மோசடிக்காரர்கள் மோசடி செய்வார்கள் என்று காவல்துறை எச்சரித்தது.
வன்போலி (deepfake) மூலம் பிரதமர் லாரன்ஸ் வோங், எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் உள்ளிட்டவர்களின் படங்களை வைத்துச் சமூக ஊடகங்களில் மோசடிச் செயல்கள் இடம்பெறுகின்றன.

