பாதுகாவல் பணிகளைக் கைவிட்டு, போலி வெடிகுண்டு ஒன்றை அகற்ற மறந்ததற்காக முன்னாள் பாதுகாவல் அதிகாரி ஒருவருக்கு $1,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்தப் போலி வெடிகுண்டு அவரது முன்னைய வேலையிடத்தில் நடந்த பாவனைப் பயிற்சியின்போது பயன்படுத்தப்பட்டது.
துரேந்திரன் விக்னேஷ் வெங்கட்ராமனின் மறதியால், ஜனவரி 5ஆம் தேதி வெடிகுண்டு அச்சுறுத்தல் சம்பவம் நடந்தது. அதனால், அங் மோ கியோ தொழிற்துறைப் பூங்கா 2ல் உள்ள ‘சிங்’ தொழிற்துறை வளாகத்திற்கு உள்துறை அமைச்சுக் குழுவைச் சேர்ந்த பல அதிகாரிகள் செல்ல வேண்டியிருந்தது.
வெடிகுண்டு சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்தப் பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அது பின்னர் போலி வெடிகுண்டு எனத் தெரியவந்தது.
வேலை செய்துகொண்டிருக்க வேண்டிய நேரத்தில் 46 வயது சிங்கப்பூரரான துரேந்திரன், ஏறக்குறைய ஐந்தரை மணி நேரம் அவ்வாளகத்தை விட்டு வெளியேறியிருந்ததாக டிசம்பர் 17ஆம் தேதி தீர்ப்பு வழங்கியதற்கு முன்னர் மாவட்ட நீதிபதி அவ் யொங் டக் லியோங் கூறினார்.
அவர் ராபின்சன் ரோட்டில் உள்ள ‘ஆக்ஸ்லி டவரில்’ அவரது நண்பர்களைச் சந்திக்கச் சென்றிருந்தார்.
இருப்பினும், துரேந்திரன் தனது வேலையை முறைப்படி செய்யாதது நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்படவில்லை.
வருகைப் பதிவேட்டில் தவறான பதிவுகளை உள்ளீடு செய்ததாக ஒரு குற்றச்சாட்டையும் வேலையிடத்திற்குச் செல்லாமல் இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டையும் அவர் டிசம்பர் 12ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
குற்றங்கள் நடந்த நேரத்தில், அவர் ‘ஒன் இம்பீரியல் செக்கியூரிட்டி’ நிறுவனத்தில் உரிமம் பெற்ற பாதுகாவல் அதிகாரியாகப் பகுதி நேரமாகப் பணிபுரிந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

