சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறியதாக நம்பப்படும் 22 வயது ஆடவர்மீது நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜூன் 5) குற்றம் சுமத்தப்படவிருக்கிறது.
வெடிகுண்டால் விமானம் தகர்க்கப்படவிருப்பதாகச் சமூக ஊடகப் பதிவில் வெளியான மிரட்டல் குறித்து பிப்ரவரி 14ஆம் தேதி இரவு 7.20 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
விசாரணைகள் மூலம் விமான நிலையக் காவல்துறை பிரிவு அதிகாரிகள் மிரட்டல் பதி வேற்றப்பட்ட ஒரு மணி நேரத்தில் ஆடவரை அடையாளம் கண்டதோடு, அவர் அபுதாபிக்குச் செல்லவிருந்த விமானத்தில் இருந்ததை உறுதிப்படுத்தினர்.
“ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த விமானம் பறக்கவிருந்த நிலையில் விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்திற்கு மீண்டும் அழைக்கப்பட்டது. அங்கு ஆடவர் கைதுசெய்யப்பட்டார்,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் ஏறிய ஆடவர், ‘இங்கிருக்கும் எவருக்கும் நான் விமானத்தை வெடிவைத்து தகர்க்கப்போகிறேன் என்று தெரியாது’ எனத் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டார்.
“ஆனால், அத்தகைய எந்தவித அபாயகரமான பொருள்களும் கண்டுபிடிக்கப்படவில்லை,” என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
ஆபத்தான பொருள் குறித்த பொய்த் தகவல் அளித்ததன் பேரில் ஆடவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
அத்தகைய குற்றத்துக்கு அதிகபட்சம் ஏழாண்டு சிறைத் தண்டனை, $50,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் எந்தத் தகவலையும் கண்காணிக்கும் அதிகாரிகள், போலியான மிரட்டல்கள் மூலம் பீதியைக் கிளப்புவோர்மீது நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார்கள் என்று காவல்துறை சொன்னது.
அச்சத்தையும் அசௌகரியத்தையும் தாண்டி போலியான மிரட்டலைக் கையாள விமான நிலைய, விமான செயல்பாட்டுப் பிரிவுகளிலிருந்து வளங்கள் பயன்படுத்தப்பட்டன என்றும் அதிகாரிகள் கூறினர்.

