சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரிகள்போல் நடித்து, போலியான ‘பேரளவுக் கொள்முதல்’ மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் ஆண்கள், மற்றவர் பெண் என்றும் மூவரும் 17 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புக்கிட் பாத்தோக் வெஸ்ட், ஃபெர்ன்வேல் லேன், நார்த்ஷோர் டிரைவ் ஆகிய பகுதிகளில் இரு நாள்கள் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அவர்கள் பிடிபட்டதாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) தெரிவித்தது.
செப்டம்பர் 18, 19ஆம் தேதிகளில் அதிகாரிகள் அங்குச் சோதனை நடத்தினர்.
பிடிபட்ட மூவரும் குற்றக் கும்பல் ஒன்று கூறியதன்படி செயல்பட்டதாகக் கருதப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் இது தெரியவந்தது.
28 வயது ஆடவர், அந்தக் குற்றக் கும்பலிடம் பணம் பெற்றுக்கொண்டு அதற்கு ஈடாகத் தனது சிங்பாஸ் விவரங்களைத் தந்ததாக நம்பப்படுகிறது.
17 வயதுப் பெண்ணும் 21 வயது ஆடவரும் தொலைபேசி இணைப்பைப் பெறுவதற்கு, அறிமுகமற்றோருக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.
அந்தத் தொலைபேசி எண்களில் சில, போலியான ‘பேரளவுக் கொள்முதல்’ மோசடிகளுடன் தொடர்புடையவை என்று காவல்துறை கூறியது.