சிங்கப்பூரில் போலியான நீதிமன்ற உத்தரவுகளைக் கொண்டு மோசடிச் சம்பவங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
போலி நீதிமன்ற உத்தரவுகளில் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளைத் தவிர்க்கக் குறிப்பிட்ட சில வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்புமாறு குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதுபோன்ற மோசடிச் சம்பவங்களில் சிக்காமல் இருக்குமாறு சிங்கப்பூர் நீதிமன்றங்கள் தரப்பு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
மோசடிச் செயல்கள் குறித்துச் சிங்கப்பூர் நீதிமன்றங்கள் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் திங்கட்கிழமை (மார்ச் 16) தகவல் பகிர்ந்துள்ளது.
“நீதிமன்றத்திற்குத் தொடர்புடைய ஆவணங்கள்போல் சில போலியான ஆவணங்கள் பொது வெளியில் வலம் வருகின்றன. வாட்ஸ்அப், டெலிகிராம், தொலைபேசி அழைப்பு வழியாக நீதிமன்ற உத்தரவுகள் அனுப்பப்படமாட்டா. அதேபோல் நீதிமன்ற உத்தரவுகளில் பணம் கேட்கப்படாது. வங்கிக் கணக்கு விவரங்களும் கேட்கப்படமாட்டா,” என்று தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுகள் உண்மையானவையா என்பதை அறிந்துகொள்ள www.courtorders.gov.sg என்ற இணையத்தளத்தை நாடலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
போலியான நீதிமன்ற ஆவணங்கள் பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டால் உடனடியாக 1799 என்ற உதவி எண்ணுக்கு அழைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
கடந்த ஆண்டு மட்டும் அரசாங்க அதிகாரிகள்போல் நடித்து ஏமாற்றும் சம்பவங்களின் எண்ணிக்கை 3,363ஆக உயர்ந்தது. அவற்றில் கிட்டத்தட்ட $242.9 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.

