போலி கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான 15 நாள் வழக்கு விசாரணை டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கியது.
தம்மிடம் வந்தவர்களுக்கு சினோஃபார்ம் தடுப்பூசிக்குப் பதிலாக செலைன் ஊசியை மருத்துவராகப் பணியாற்றிய ஜிப்சன் குவா போட்டதாகக் கூறப்படுகிறது.
2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள தம்மிடம் வந்தவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிக்குப் பதிலாக செலைன் ஊசியைப் போட்டு அவர்களிடமிருந்து $6,000 வரை குவா பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளில் ஒன்றான சினோஃபார்ம் தடுப்பூசி போட்டதாக குவா பதிவு செய்தார்.
கொவிட்-19 நெருக்கடி நிலையின்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்குப் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
இதைத் தவிர்க்க தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று குவாவிடம் ஊசி போட்டுக்கொண்டவர்கள் விரும்பினர்.
36 வயது குவா, டிசம்பர் 16ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அவர் 17 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
குவா, 17 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிக்குப் பதிலாக செலைன் ஊசியைப் போட்டு சுகாதார மேம்பாட்டுக் கழகத்திடம் பொய்த் தகவல்களைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தச் சதித் திட்டத்தில் அவர் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குவாவின் மருந்தக உதவியாளராகப் பணிபுரிந்த 43 வயது தாமஸ் சுவா செங் சூன்னும் இக்குற்றத்துடன் தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது.
இந்த வழக்குடன் தொடர்புடைய 14 பேர் சாட்சியம் அளிக்க இருப்பதாகவும் அதில் குவாவின் செயலால் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தடுப்பூசி எதிர்ப்புக் குழுவான ‘ஹீலிங் தி டிவைட்’டின் தலைவரான 48 வயது ஐரிஸ் சியாவ் பெய்யுடனும் குவா வழக்கு எதிர்நோக்குகிறார்.
சுகாதார மேம்பாட்டுக் கழகத்திடம் பொய்த் தகவல்களைச் சமர்ப்பிக்க குவா, சுவா, கோ ஆகிய மூவரும் சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.

