தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$10,000 கள்ளப் பணத்தாள்களை அச்சடித்த கும்பல் சிக்கியது

2 mins read
2c77d0b9-ce35-47ea-8945-d8816ef25392
இந்தோனீசியாவில் பறிமுதல் செய்யப்பட்ட $10,000 கள்ளப் பணத்தாள்கள். - படம்: இந்தோனீசிய தேசிய காவல்துறை

கள்ளப் பணத்தாள்களை அச்சடிக்கும் கும்பலின் நடவடிக்கைகளை சிங்கப்பூர், இந்தோனீசிய காவல்துறையினர் முறியடித்ததில் நான்கு இந்தோனீசியர்கள் கைதாகியுள்ளனர்.

இந்தோனீசியாவின் ரியாவ் பகுதியில் 2023ஆம் ஆண்டு நவம்பர் 15 முதல் 20 வரை நடத்தப்பட்ட சோதனையில் 39 வயதுக்கும் 51 வயதுக்கும் இடைப்பட்ட அந்த நால்வர் சிக்கினர்.

சிங்கப்பூரின் சூதாட்டக் கூடம் ஒன்றில் $10,000 கள்ளப் பணத்தாள் ஒன்றை இந்தோனீசிய தம்பதியர் தர முயன்றதாக செப்டம்பர் 21, 2023ல் சிங்கப்பூர் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

சூதாட்ட சில்லுகளைப் பெறுவதற்காக அவர்கள் அந்த கள்ளப் பணத்தாளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

தம்பதியர் தந்த பணத்தாள் போலியானது என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஆடவர் இன்னொரு $10,000 பணத்தாளை உறுதிப்படுத்துவதற்காக நீட்டினார். அதுவும் போலியானது என்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இரண்டு பணத்தாள்களையும் சூதாட்டக்கூடம் பறிமுதல் செய்து வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவிடம் (சிஏடி) ஒப்படைத்தது.

அந்த நாளன்று இந்தோனீசியாவின் பாத்தாம் தீவிலிருந்து அந்தத் தம்பதி சிங்கப்பூருக்கு வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

வர்த்தகப் பரிவர்த்தனை ஒன்றுக்காக பாத்தாமில் இருந்த அவர்களின் வர்த்தகப் பங்காளி ஒருவர் கட்டணமாகத் தந்த பணத்தாள்கள் அவை என்றும் தெரியவந்தது.

மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக இத்தகவலை இந்தோனீசியக் காவல்துறையுடன் சிஏடி பகிர்ந்துகொண்டது.

இதையடுத்து, இந்தோனீசியக் காவல்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் சந்தேக நபர்கள் சிக்கினர்.

$10,000 மதிப்பிலான பணத்தாள்கள் மொத்தம் 390 கைப்பற்றப்பட்டன.

தங்களிடம் இருந்தவை கள்ளப் பணத்தாள்கள் என்று அந்த இந்தோனீசியத் தம்பதியர் அறிந்திருக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் மீது சிங்கப்பூர் காவல்துறை மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் நால்வருக்கும் 15 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்