விவரங்களைச் சரிபார்க்கச் சொல்லும் போலி மின்னஞ்சல்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

விவரங்களைச் சரிபார்க்கச் சொல்லும் போலி மின்னஞ்சல்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

படம்: சுகாதார அமைச்சு / ஃபேஸ்புக்

30 Sep 2026 - 7:31 pm

1 mins read

சுகாதார அமைச்சிடமிருந்து சுகாதார விவரங்களைக் கட்டாயமாகச் சரிபார்க்கும்படி கூறும் மின்னஞ்சலைப் பெற்றால் கவனத்துடன் இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிக்காரர்களிடமிருந்து அத்தகைய மின்னஞ்சல் வருவதாக அமைச்சு புதன்கிழமை (செப்டம்பர் 30) அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

மின்னிலக்கச் சுகாதாரச் சோதனை தொடங்கியிருப்பதாகக் கூறும் மின்னஞ்சல், கொடுக்கப்பட்ட இணைப்புவழி தங்கள் விவரங்களைச் சரிபார்த்துக்கொள்ளும்படி கூறுகிறது.

அவ்வாறு செய்யத் தவறினால் பெறுநருக்கான சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளும் சலுகைகளும் ரத்துசெய்யப்படும் என்று மின்னஞ்சல் குறிப்பிடுவதை அமைச்சு சுட்டியது.

அத்தகைய தகவல் உண்மை அல்ல என்றும் தன்னிடம் சுகாதார விவரங்களைச் சரிபார்க்கும் மின்னிலக்கத் தளம் எதுவும் இல்லை என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியது.

சுகாதார அமைச்சின் அதிகாரபூர்வ தளங்கள் வழியாக மட்டுமே விவரங்களைச் சரிபார்க்கும்படியான கோரிக்கைகள் தெரிவிக்கப்படும் என்று அது வலியுறுத்தியது.

போலியான மின்னஞ்சலைப் பெற்றோர் அதை அழித்துவிடவேண்டும் அல்லது காவல்துறையிடம் அதுபற்றி புகார் அளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

6325-9220 என்ற சுகாதார அமைச்சின் அவசர எண்ணைத் தொடர்புகொண்டு மின்னஞ்சலின் உண்மைத்தன்மையைப் பொதுமக்கள் சரிபார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையின் மத்திய ஆண்டு மோசடி புள்ளிவிவரங்களின்படி இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் மோசடிகளில் $410.6 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் இதுவரை மோசடிகளுக்கு $4 பில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்திருக்கிறது

குறிப்புச் சொற்கள்
சுகாதார அமைச்சுபோலிமின்னஞ்சல்எச்சரிக்கை