‘இஆர்பி’ கட்டணம், அபராதம் குறித்து போலி மின்னஞ்சல்

நிலப் போக்குவரத்து ஆணையம் எச்சரிக்கை

‘இஆர்பி’ கட்டணம், அபராதம் குறித்து போலி மின்னஞ்சல்

படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

27 May 2026 - 3:18 pm

2 mins read

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பெயரில் போலியாக அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் குறித்துப் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு நிலப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்துள்ளது.

தங்களுக்குச் செலுத்தப்படாத அபராதத் தொகையும் மின்னியல் சாலைக் கட்டணமும் (இஆர்பி) இருப்பதாகக் கூறும் அத்தகைய தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து புதன்கிழமையன்று (மே 27) ஆணையம் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், அத்தகைய போலி மின்னஞ்சல்கள் பொதுவாக அதைப் பெறுபவர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்துகின்றன என்றும் ‘பேநவ்’ (PayNow) வழியாகப் பணத்தைச் செலுத்துமாறும் ‘சிங்பாஸ்’ கணக்குகளில் உள்நுழையுமாறும் கோருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.

பயனர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடுவதற்காகவே போலி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாக அது தெரிவித்துள்ளது.

வாகன ஓட்டுநர்கள் அதிகாரபூர்வத் தகவல் தொடர்புத் தளங்களை மட்டுமே நாடுமாறும் தங்களுக்கு ஏதேனும் அபராதம் எஞ்சியிருக்கிறதா என்பதை ‘ஒன்மோட்டரிங்’ (OneMotoring) இணையத்தளம் வழியாகச் சரிபார்த்துக் கொள்ளுமாறும் அது அறிவுறுத்தியுள்ளது.

அத்தகைய மின்னஞ்சல்களைப் பெறுவோர் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்த வேண்டாம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ள எந்தவொரு இணைப்புகளையும் சொடுக்க வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அது நினைவூட்டியது.

நிலப் போக்குவரத்து பெயரில் அனுப்பப்பட்ட போலி மின்னஞ்சலின் படங்களை ‘ரெடிட்’ தளத்தில் பயனர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (மே 26) பகிர்ந்ததைத் தொடர்ந்து, இந்த அதிகாரபூர்வ விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 2019ல் பல்வேறு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் நான்கு பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளனர். 2025ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 37,308 மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 913.1 மில்லியன் தொகை இழக்கப்பட்டது.

அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து நடத்தப்படும் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை, 2024ல் 1,504ஆகப் பதிவானது. அந்த எண்ணிக்கை 2025ல் 3,363 ஆக இரு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஐந்து முக்கிய மோசடிகளில் இதுவும் ஒன்று.

குறிப்புச் சொற்கள்
நிலப் போக்குவரத்து ஆணையம்மோசடிஇஆர்பிகட்டணம்மின்னஞ்சல்