தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2024ல் போலித் திருமணங்கள் சற்று கூடின

2 mins read
fbef5a7e-efa9-4352-8a3d-ab2a3e13c497
போலித் திருமணம் செய்து கொண்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை ஐசிஏ அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புக்கிட் பாத்தோக்கில் வசிக்கும் ஆடவர் ஒருவர், வியட்னாமிய பெண்ணைத் திருமணம் செய்து பல ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருவதாக திருமண ஆவணங்கள் காட்டுகின்றன.

ஆனால் அது ஒரு போலித் திருமணம் என்பதை ஐசிஏ எனும் சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் பின்னர் கண்டறிந்தது.

டிசம்பர் 11ஆம் தேதி அந்த 33 வயது ஆடவரின் வீட்டுக்குள் ஐசிஏ அதிகாரிகள் நுழைந்தபோது அங்கு திருமணமான தம்பதி வாழ்ந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லை. பெண்ணின் உடைகள் எதுவும் இல்லை. அங்கு இருந்த ஆடவரின் தாயார் தனது மகனுக்கு திருமணமானது பற்றி தனக்குத் தெரியாது என்று கூறினார்.

இதையடுத்து சிங்கப்பூரின் குடிநுழைவு சலுகைகளுக்காக விண்ணப்பங்களில் பொய்யான தகவல்களை அளித்ததற்காக அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அவரது மனைவி, 31, அதே நாளில் பொத்தோங் பாசிரில் உள்ள அவரது வீட்டில் நடந்த சோதனையின் போது கைது செய்யப்பட்டார்.

2024ஆம் ஆண்டு ஜனவரி, செப்டம்பர் இடையில் இத்தகைய பொய்யான 32 திருமண வழக்குகள் பதிவாகின. இது, 2023ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் நான்கு வழக்குகள் அதிகம்.

ஐசிஏ புலனாய்வுப் பிரிவின் துணை பொறுப்பு அதிகாரியான ஆய்வாளர் மார்க் சாய், சிங்கப்பூரில் நடக்கும் போலித் திருமணங்கள் பெரும்பாலும் ஒரு வெளிநாட்டுப் பெண், சிங்கப்பூர் ஆடவருக்கு பணம் கொடுத்து திருமணம் செய்துகொள்வதாக உள்ளது என்றார்.

இதனால் அந்தப் பெண் இங்கு தங்க அல்லது வேலை செய்ய அனுமதி பெறலாம் என்றார் அவர்.

இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் வெளிநாட்டவர் ஈடுபடுவதால், சிங்கப்பூரில் சமூகப் பிரச்சினைக்கு வழிவகுக்கலாம் என்பதால் இவ்வாறான வழக்குகளின் அதிகரிப்பு கவலையளிக்கிறது என்று ஆய்வாளர் சாய் குறிப்பிட்டார்.

இத்தகைய போலித் திருமணத்தில் ஈடுபட்டதற்காக குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஐசிஏ புலனாய்வுப் பிரிவின் மூத்த உதவி இயக்குநரான கோ வீ கியாட், பெரும்பாலான போலித் திருமணங்கள் பொது மக்கள் அளித்த தகவல் மூலம் தெரிய வந்ததாகக் கூறினார்.

2024 ஜூன் மாதத்தில் போலித் திருமணங்களில் சம்பந்தப்பட்ட 13 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்களில் ஆறு பேர் வியட்னாமிய பெண்கள். ஏழு பேர் சிங்கப்பூர் ஆடவர்கள்.

குறிப்புச் சொற்கள்