இணையத்தில் போலி விமர்சனங்களை வெளியிட்ட ஜூலியன் துங் என்பவருக்கும் அத்தகைய சேவையைப் பெற்ற 45 வணிக நிறுவனங்களுக்கும் எதிராகச் சிங்கப்பூர் போட்டிகள், பயனீட்டாளர் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கூகல், ஃபேஸ்புக், டிரிப்அட்வைசர் உள்ளிட்ட பல்வேறு இணையத்தளங்களில் அந்தப் போலி விமர்சனங்கள் திட்டமிட்டுப் பதிவேற்றப்பட்டுள்ளன.
பைரிவியூஎஸ்ஜி (BuyReviewSG), கெட்ரிவியூஎஸ்ஜி (GetReviewSG) ஆகிய இரண்டு இணையத்தளங்கள் மூலம் ஜூலியன் கிட்டத்தட்ட 100 வணிக நிறுவனங்களுக்குப் போலி விமர்சனச் சேவைகளை வழங்கியதை ஆணையம் கண்டறிந்தது.
அந்த இரண்டு இணையத்தளங்களும் ஜூலியனுக்குச் சொந்தமானவை. வாடிக்கையாளர்களின் உண்மையான அனுபவங்களைப்போல விமர்சனங்களைப் பதிவிட, அதிநவீனச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அந்த விமர்சனங்களை இணையத்தில் பதிவிட டெலிகிராம் செயலி வழியாக ஆள் திரட்டப்பட்டு, அவர்களுக்குப் பணமும் வழங்கப்பட்டது.
இதன்மூலம், பல்வேறு நிறுவனங்களின் புகழ், தரம் குறித்து வாடிக்கையாளர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர் என்று ஆணையம் சுட்டிக்காட்டியது.
விலைகொடுத்துப் போலி விமர்சனங்களை வாங்கியதை ஒப்புக்கொண்ட 45 நிறுவனங்கள், அத்தகைய நியாயமற்ற செயல்களை உடனடியாக நிறுத்திக்கொள்ளவும், போலி விமர்சனங்களை நீக்கவும், தங்களது இணையத்தளங்களில் மன்னிப்பு அறிக்கையை ஆறு மாதங்களுக்கு வெளியிடவும் முழுமையாக இணங்கியுள்ளன.
மேலும், அந்தச் சேவையை வழங்கியவர் தனது தவற்றை ஒப்புக்கொண்டு வெளிப்படையாக மன்னிப்புக்கேட்கவும், அந்தச் சேவை மூலம் கிடைத்த பணத்தை அறநிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும், இரண்டு நிறுவனங்கள் மட்டும் ஆணையத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க மறுத்துவிட்டன. அவற்றுக்கு எதிரான விசாரணைகளை ஆணையம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
தேவைப்பட்டால் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய மின்னிலக்கக் காலத்தில் வாடிக்கையாளர்கள் இணைய விமர்சனங்களை நம்பியே பொருள் வாங்குகின்றனர். அவர்களை ஏமாற்றும் இந்தச் செயல்கள் நேர்மையான வணிகர்களைப் பெரிதும் பாதிக்கின்றன என்று ஆணையத்தின் தலைமை நிர்வாகி ஆல்வின் கோ தெரிவித்தார்.
