கடந்த ஜூலை மாதத்திலிருந்து பங்குச்சந்தை நிலவரத்தைத் தவறாகச் சித்திரித்து மேற்கொள்ளப்பட்ட மோசடிகளின் எண்ணிக்கை 21ஆகப் பதிவாகியுள்ளது; அவை வெளிநாட்டுப் பங்குச்சந்தைகளில் இடம்பெறும் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டவை.
அதிலும் குறிப்பாக ஹாங்காங் பங்குச்சந்தையில் இடம்பெறும் ஒரு நிறுவனத்துடன் தொடர்புடைய சம்பவத்தில் 700,000 வெள்ளிக்கும் அதிகமான தொகை பறிபோனது.
‘பம்ப் அண்ட் டம்ப்’ என்றழைக்கப்படும் இவ்வகை மோசடியில் மோசடிக்காரர்கள் தவறான கண்ணோட்டத்தைத் தரும் அல்லது போலியான தகவல்களைக் கொண்டு குறிப்பிட்ட சில பங்குகளை விளம்பரப்படுத்துவர். அதன் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குச் சந்தையில் அதிக வரவேற்பு இருப்பது போன்ற உணர்வை அவர்கள் ஏற்படுத்துவர்.
அடுத்தகட்டமாக மோசடிக்காரர்கள் பங்குகளை அதிகரிக்கப்பட்ட விலையில் விற்பர். அதனால் அந்நிறுவனத்தின் பங்குகள் வேகமாகச் சரியும்.
இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்பவர்கள் குறிப்பிடத்தக்க நிதி இழப்பை எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நிகழ்ந்த இத்தகைய சம்பவம் ஒன்றில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 500,000 வெள்ளிக்கும் மேலான இழப்பு ஏற்பட்டது. ஹாங்காங் பங்குச்சந்தையில் இடம்பெறும் ஒரு நிறுவனத்தில் 650,000 வெள்ளி முதலீடு செய்த பிறகு அவர்களுக்குப் பேரிழப்பு ஏற்பட்டது.
சமூக ஊடகங்கள்வழி ஈர்ப்பு
பாதிக்கப்பட்டவர்களை மோசடிக்காரர்கள் பெரும்பாலும் சமூக ஊடகத் தளங்கள் அல்லது வாட்ஸ்அப் போன்ற குறுந்தகவல்கள் தளங்கள்வழி ஈர்த்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
மோசடிக்காரர்கள் அத்தளங்களில் உரையாடல் குழுக்களை (chat groups) உருவாக்குவர். சில வேளைகளில் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்களையும் பயன்படுத்துவர்.
மோசடி ஏற்படும் விதம்
தாங்கள் அனுபவம்வாய்ந்த முதலீட்டாளர்கள் அல்லது முதலீடுகள் குறித்த துல்லியத் தகவல்கள் தெரிந்த வழிகாட்டிகள் என்று அடையாளப்படுத்திக்கொணடு ஏமாற்றுக்காரர்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
முதலில் அவர்கள் நல்ல நிலையில் இருக்கும் பங்குகள் அல்லது லாபம் ஈட்டித்தந்த பங்குகளை விளம்பரப்படுத்துவர். பாதிக்கப்பட்டவரின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் ஹாங்காங் அல்லது அமெரிக்கப் பங்குச்சந்தைகளில் இடம்பெறும் ‘அதிக மதிப்புள்ள’ நிறுவனங்களில் பங்குகளை வாங்குமாறு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பர்.
ஒரு சம்பவத்தில் ஐவர், ஹாங்காங் பங்குச்சந்தையில் இடம்பெற்ற நிறுவனம் ஒன்றின் 1,037,000 பங்குகளை வாங்கினர். பங்கு விலை ஒரு வாரத்துக்குள் கிட்டத்தட்ட 75 விழுக்காடு சரிந்தது. அந்த ஐவரும் மொத்தமாக 4.6 மில்லியன் ஹாங்காங் டாலரை (744,000 வெள்ளி) இழந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.


