கடந்த ஜூலை மாதத்திலிருந்து பங்குச்சந்தை நிலவரத்தைத் தவறாகச் சித்திரித்து மேற்கொள்ளப்பட்ட மோசடிகளின் எண்ணிக்கை 21ஆகப் பதிவாகியுள்ளது; அவை வெளிநாட்டுப் பங்குச்சந்தைகளில் இடம்பெறும் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டவை.
அதிலும் குறிப்பாக ஹாங்காங் பங்குச்சந்தையில் இடம்பெற்ற ஒரு நிறுவனத்துடன் தொடர்புடைய சம்பவத்தில் 700,000 வெள்ளிக்கும் அதிகமான தொகை பறிபோனது.
‘பம்ப் ஆண்ட் டம்ப்’ என்றழைக்கப்படும் இவ்வகை மோசடியில் மோசடிக்காரர்கள் தவறான கண்ணோட்டத்தைத் தரும் அல்லது போலியான தகவல்களைக் கொண்டு குறிப்பிட்ட சில பங்குகளை விளம்பரப்படுத்துவர். அதன் முலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குச் சந்தையில் அதிக வரவேற்பு இருப்பது போன்ற உணர்வை அவர்கள் ஏற்படுத்துவர்.
அந்தக் கட்டத்துக்குப் பிறகு மோசடிக்காரர்கள் பங்குகளை அதிகரிக்கப்பட்ட விலையில் விற்பர். அதனால் அந்நிறுவனத்தின் பங்குகள் வேகமாகச் சரியும்.
இதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்பவர்கள் குறிப்பிடத்தக்க நிதி இழப்பை எதிர்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


