பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டதாக பொய்ப் புகார்: பெண்ணுக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு

2 mins read
69b10cc4-205d-418a-bd8e-9d699799d3b6
கிளேரிஸ் லிங் மின் ருய், 20, எனும் இப்பெண்ணுக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. - படம்: ஷின் மின்

தம்முடன் பாலியல் உறவு கொண்ட ஆடவர் $1,200 கொடுக்க மறுத்ததால், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவல்துறையிடம் பொய்ப் புகார் அளித்த பெண்ணுக்குத் திங்கட்கிழமை (அக்டோபர் 27) ஓராண்டு நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கிளேரிஸ் லிங் மின் ருய், 20, கண்காணிப்பு உத்தரவின் ஒரு பகுதியாகத் தினமும் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை வீட்டிலேயே இருக்க வேண்டும். அத்துடன், இவர் 60 மணி நேரம் சமூகச் சேவை செய்ய வேண்டும்.

தொல்லை கொடுத்தது, அரசாங்க ஊழியருக்குத் தவறான தகவலைக் கொடுத்தது என இரண்டு குற்றச்சாட்டுகளை இவர் முன்னதாக ஒப்புக்கொண்டார்.

இவரது நன்னடத்தையை உறுதிப்படுத்த இவரது பெற்றோர் $5,000 பிணைத் தொகையைச் செலுத்த வேண்டியிருந்தது.

லிங்கும் 43 வயதான அந்த ஆடவரும் ஒரு ‘டேட்டிங்’ செயலிமூலம் அறிமுகமானதாகவும் பின்னர் டெலிகிராம் மூலம் இருவரும் தொடர்புகொண்டதாகவும் அரசாங்க வழக்கறிஞர் டியோ கெங் பெங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மார்ச் 18ஆம் தேதி அவர்கள் நேரில் சந்தித்தனர். லிங் நேரம் ஒதுக்கியதற்காக அவருக்கு $200 கொடுக்க அந்த ஆடவர் ஒப்புக்கொண்டிருந்தார்.

மாலை 6.15 மணியளவில் லிங்கின் வீட்டிற்கு அருகே அவர் சென்றதும் பின்னர் உணவு, மது அருந்த இருவரும் ஒரு மதுபானக்கூடத்துக்குச் சென்றனர்.

அன்றிரவு, கேவனா சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்று, அங்கு பரஸ்பர சம்மதத்துடன் அவர்கள் பாலியல் உறவு கொண்டனர்.

அதன் பிறகு, அந்த ஆடவரிடம் லிங் $1,200 கேட்டதாகவும், ஆனால் அவர் கொடுக்க மறுத்துவிட்டதாகவும் அரசாங்க வழக்கறிஞர் டியோ கூறினார்.

“கிளேரிஸ் கோபமடைந்து அந்த ஆடவரைத் திட்டத் தொடங்கினார். அதற்கு அந்த ஆடவர் $500 கொடுப்பதாகக் கூறினார். ஆனால், கிளேரிஸ் அதை மறுத்துவிட்டார்,” என்றார் வழக்கறிஞர்.

பாலியல் உறவுக்கு $1,200 கொடுக்க அந்த ஆடவர் முன்னதாக ஒப்புக்கொண்டாரா என்பது பற்றி நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

மார்ச் 19ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில், அந்த ஆடவர் தம்மை ‘பாலியல் வன்கொடுமை’ செய்ததாகக் காவல்துறையிடம் தெரிவிக்கப் போவதாக அவரிடம் லிங் கூறினார்.

ஆறு நிமிடங்கள் கழித்து காவல்துறையை லிங் தொடர்புகொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நள்ளிரவு 12.45 மணியளவில் ஒரு பெண் காவல்துறை அதிகாரி அந்த ஹோட்டலுக்குச் சென்றார். அப்போது, தாம் ஹோட்டல் அறையில் போதையில் இருந்தபோது அந்த ஆடவர் தம்மைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த அதிகாரியிடம் லிம் பொய் சொன்னார்.

பின்னர் அதிகாலை 2 மணியளவில், ஓர் ஆண் காவல்துறை அதிகாரி லிங்கிடம் விசாரித்தார். அப்போதும் அதேபோன்ற தவறான தகவலை லிங் கொடுத்தார்.

ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளுடன் லிங் கூறியது ஒத்துப்போகவில்லை என்று அவரிடம் பின்னர் அந்த இரு அதிகாரிகளும் தெரிவித்தனர்.

அதிகாலை 2.10 மணியளவில், லிங் இறுதியாக உண்மையை ஒப்புக்கொண்டார்.

ஜூன் மாதம் அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

குறிப்புச் சொற்கள்