வேலைவாய்ப்பு குறித்து மனிதவள அமைச்சிடம் தவறான தகவல் அளித்ததன் தொடர்பில் கட்டுமான நிறுவன இயக்குநர்கள் ஐவர் உட்பட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இம்மாதம் 21ஆம் தேதியன்று அதிகாரிகள் 31 இடங்களில் மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளை அடுத்து, இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
தங்கள் நிறுவனங்களுக்கான வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கை ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்காக, வேலையில் இல்லாத சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளின் மத்திய சேம நிதிக் கணக்குகளில் அந்நிறுவனங்கள் பணம் செலுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) ஓர் அறிக்கைமூலம் தெரிவித்தது.
அந்த ஐந்து நிறுவன இயக்குநர்களும் சிங்கப்பூரர்கள் என்றும் அவர்கள் 42 முதல் 57 வயதிற்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
எஞ்சிய அறுவரில் நால்வர் சிங்கப்பூரர்கள், இருவர் நிரந்தரவாசிகள். அவர்கள், அந்த ஐந்து இயக்குநர்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்ற குற்றங்களுக்காக மேலும் 16 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
முதலாளிகள் முறையான வேலை அனுமதிச்சீட்டுகளின் மூலமே வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க வேண்டும் என்று அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
வேலை அனுமதிச்சீட்டு விண்ணப்பங்களில் பொய்யான தகவல்களை அளித்த குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், குற்றவாளிக்கு $20,000 வரை அபராதம், ஈராண்டுவரை சிறை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், தவறிழைக்கும் நிறுவனங்களின் வேலை அனுமதிச்சீட்டுச் சலுகைகள் நிறுத்திவைக்கப்படலாம். அதுபோல, வேலை அனுமதிச்சீட்டு விண்ணப்பதாரர் சிங்கப்பூரில் வேலைசெய்வதிலிருந்து தடைசெய்யப்படலாம்.

