முன்னாள் குழந்தைப் பராமரிப்பு நிலைய இயக்குநர், நிலையத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் இருவர் ஆகியோர் மீது பொய்யான மானியத்தொகை கோரிக்கைகள் தொடர்பில் நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.
பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பிடமிருந்து (இசிடிஏ) கிட்டத்தட்ட $5,000 மதிப்பிலான குழந்தைப் பாரமரிப்பு மானியத்தொகையை இவர்கள் கையாடியதாகக் கூறப்பட்டது.
நீதிமன்றத்தில் நிலையத்தின் முன்னாள் இயக்குநர் ஜோசஃபின் டான் போ சூ, 53 மற்றும் அவரது முன்னாள் ஊழியர்களான அருளானந்தம் ராஜேஸ்வரி, 53, ஃபாத்திமா பிவீ முகம்மது ஷரிஃப், 42 ஆகியோர் முன்னிலையாகினர்.
டான், ராஜேஸ்வரி ஆகிய இருவர் மீதும் எட்டு குற்றச்சாட்டுகள், ஃபாத்திமா பிவீ மீது நான்கு குற்றச்சாட்டுகள் என மூவர் மீதும் மோசடி குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
மூவரும் ஃபெய்த் எடுகேர் செண்டரில் ஒன்றாக வேலை பார்த்ததாகவும் நிலையத்திற்கு வராத குழந்தைகளின் பேரில் மானியத்தொகையை இசிடிஏயிடமிருந்து பெறும் மோசடியில் அவர்கள் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.
எட்டு சிறார்களின் வருகைப் பதிவை டான் மற்றும் ராஜேஸ்வரி பொய்யாக உறுதிசெய்தனர்.
அதேபோல் நான்கு சிறார்களின் வருகைப் பதிவைப் பொய்யாக உறுதிசெய்ததன் தொடர்பில் ஃபாத்திமா பிவீ மீது குற்றம் சுமத்தப்பட்டது.
நிலையத்தின் மானியத்தொகை கோரிக்கைகளில் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முறைகேடுகள் இருந்ததை இசிடிஏ கண்டறிந்து இது குறித்து போலிசாரிடம் தெரியப்படுத்தியது.
மானியத்தொகை முழுவதும் மீண்டும் பெறப்பட்டுவிட்டதாக இசிடிஏ தெரிவித்தது.
குற்றம் நிரூபணமானால், மூவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

