குடும்பங்களை வலுப்படுத்தும் திட்டத்தின் ஆலோசனைச் சேவை விரிவாக்கம்

குடும்பங்களை வலுப்படுத்தும் திட்டத்தின் ஆலோசனைச் சேவை விரிவாக்கம்

1 mins read
dac2ece4-c41a-4d3e-b2e5-c456bd1d1977
2030க்குள் 12,000 குடும்ப ஆலோசனை வழக்குகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், குடும்பங்களை வலுப்படுத்தும் திட்டத்தின் ஆலோசனைச் சேவையைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு விரிவாக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

திருமணப் பந்தம், பிள்ளை வளர்ப்பு, குடும்ப உறவுகளைக் கையாளுவதில் அதிகச் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய குடும்பங்களுக்கு ஆதரவளிக்க, குடும்பங்களை வலுப்படுத்தும் திட்டம் 2021ல் நிறுவப்பட்டது.

இத்திட்டத்தில் சேர்ந்துள்ளோரின் மனநலம், திருமண வாழ்க்கை இணக்கம், குழந்தைகளின் உளவியல்-சமூகச் செயல்பாடுகளைக் குடும்ப ஆலோசனை மேம்படுத்தியுள்ளதை முதற்கட்ட முடிவுகள் காட்டியுள்ளன.

குடும்ப ஆலோசனை பெறுவோரின் எண்ணிக்கை 2022ல் 3,100லிருந்து 2025ல் 5,700ஆக அதிகரித்தது. இந்தப் போக்கு தொடரும் என சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு எதிர்பார்க்கிறது.

இந்நிலையில், 2030க்குள் 12,000 குடும்ப ஆலோசனை வழக்குகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், குடும்பங்களை வலுப்படுத்தும் திட்டத்தின் ஆலோசனைச் சேவையை அமைச்சு விரிவாக்கும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி அறிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (மார்ச் 5) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

குடும்பங்களை வலுப்படுத்தும் திட்டத்தின் நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று அல்லது இணையவழி ஆலோசனை பெற www.familyassist.msf.gov.sg இணையத்தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்
குடும்பம்ஆலோசனைஆதரவு