அரசாங்கம் அனைத்துக் கட்டங்களிலும் இளையக் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராகவுள்ளது என்று உறுதியளித்துள்ளார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
“குடும்பங்களே நமது சமூகத்தின் அடித்தளம். ஆகையால், குறிப்பாக இளம் குடும்பங்களுக்கும் குடும்பம் தொடங்கத் திட்டமிடும் இளைய சிங்கப்பூரர்களுக்கும் கூடுதல் ஆதரவளிக்கத் திட்டமிட்டு வருகிறோம்,” என்று அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை (மே 31) எக்ஸ்போவில் நடந்தேறிய தேசியக் குடும்ப விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் அவ்வாறு சொன்னார்.
அந்நிகழ்ச்சியில் குழந்தைகளிடையே நல்ல மின்னிலக்கப் பழக்கவழக்கங்களை வளர்க்க முனையும் ‘மின்னிலக்கத் திரை அறிவாற்றல் – தொடக்கம் முதல்’ (Screen Smart from the Start) வழிகாட்டியைப் பிரதமர் அறிமுகப்படுத்தினார்.
“இந்த வழிகாட்டி, சிறுவர்களிடையே சீரான, சிறந்த மின்னிலக்கப் பயன்பாட்டை ஆதரிக்க உதவும் வளங்களைப் பெற்றோருக்கு வழங்கும்,” என்றார் திரு வோங்.
18 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு மின்னிலக்கச் சாதனங்களை அறிமுகப்படுத்தாமல், அவர்கள் வளரும் கட்டத்தில் கட்டுப்பாடான மின்னிலக்கப் பயன்பாட்டை அறிமுகப்படுத்தி, அவர்கள் அதில் பார்ப்பவற்றைப் பற்றிப் பெற்றோர் கற்பிப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“குழந்தை வளர்ப்பு தொடர்ந்து கடினமாகி வருகிறது,” என்று கூறினார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தகவல், மின்னிலக்க மேம்பாட்டு துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம்.
சென்ற ஆண்டு தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு நடத்திய கருத்தாய்வில் கலந்துகொண்ட பெற்றோரில், 37 விழுக்காட்டினர் மட்டுமே தங்கள் பிள்ளைகளின் மின்னிலக்கப் பயன்பாட்டுப் பழக்கவழக்கங்களைத் தங்களால் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கும் மேற்பட்ட பெற்றோர் அந்தச் சவாலைச் சமாளிக்கக் கூடுதல் ஆதரவு தேவைப்படுவதாகக் கூறினர்.
அதன் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘மின்னிலக்கத் திரை அறிவாற்றல் – தொடக்கம் முதல்’ வழிகாட்டி பெற்றோருக்குத் தேவையான வளங்களை எளிய முறையில் வழங்குகிறது.
அதோடு, குடும்பப் பிணைப்பை வளர்க்கவும் மின்னிலக்கப் பயன்பாட்டைக் குறைக்கவும் மின்னிலக்கச் சாதனங்களை உள்ளடக்காத குடும்ப நடவடிக்கைகளை அந்த வழிகாட்டி பெற்றோருக்குப் பரிந்துரைக்கிறது.
அத்தகைய பல்வேறு நேரடி நடவடிக்கைகளைத் தேசியக் குடும்ப விழாவின்கீழ் வாழ்வுக்காகக் குடும்பங்கள் மன்றம் (Families for Life) ஜூன் மாதம் முழுவதும் தீவெங்கும் நடத்தவுள்ளது.
“குடும்பம் நம்மிடமிருந்து தொடங்குகிறது என்ற கருப்பொருளைக் கொண்டிருக்கும் இவ்வாண்டின் விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளில் அனைவரும் தங்கள் குடும்பத்தினருக்காக நேரம் ஒதுக்கி ஈடுபடுவது சிறப்பாக இருக்கும்,” எனக் கூறினார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உள்துறை துணை அமைச்சர் கோ பெய் மிங்.
சிறுவர்களுடன் ஈடுபடும் சிறு நடவடிக்கைகளும் மறக்கமுடியா நினைவுகளாக மாறலாம் என நம்பும் அவர், பிள்ளைகளுடன் இல்லங்களில் சேர்ந்து உணவு உண்ணுவது, புத்தகம் படிப்பது போன்ற நடவடிக்கைகளில் பெற்றோரை ஈடுபட ஊக்குவித்தார்.
அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் நவீன் பிரகாஷ், 35.
வாழ்வுக்காகக் குடும்பங்கள் மன்றத்தின் தொண்டூழியத் தலைவர்களில் ஒருவரான அவர், தமது மனைவியுடனும் ஆறு வயது மகளுடனும் வார நாள்களில் நேரம் ஒதுக்கிப் பற்பல குடும்ப நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகப் பகிர்ந்துகொண்டார்.
“மற்ற பெற்றோரும் தங்கள் குடும்பத்தினரின் அன்பு மொழிகளை அறிந்துகொண்டு, அதற்கேற்றவாறு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சிறப்பாக இருக்கும்,” என அவர் கூறினார்.
ஜூன் 28ஆம் தேதிவரை நீடிக்கும் தேசியக் குடும்ப விழாவில் மொத்தம் 26 நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
நிகழ்ச்சிகளுக்கான மேல்விவரங்களை அறிய go.gov.sg/familyfestsg-2026 எனும் இணையத்தளத்தை நாடலாம்.
‘மின்னிலக்கத் திரை அறிவாற்றல் – தொடக்கம் முதல்’ வழிகாட்டியைப் பற்றிய மேல் விவரங்களை https://www.bescreensmart.gov.sg/ இணையத்தளத்தில் பெறலாம்.

