தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரின் 36வது மருத்துவ சிறப்புத் துறையாக குடும்ப மருத்துவத்துக்கு அங்கீகாரம்

2 mins read
87f44f7b-3d16-442e-b369-f4ea0ad06960
குடும்ப மருத்துவர்கள் நமது ஆரோக்கியத்தை நிர்வகிக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும் நாட்டின் நம்பகமான ஆலோசகர்கள் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார். - படம்: ஓங் யி காங் ஃபேஸ்புக்

குடும்ப மருத்துவம் சனிக்கிழமை (நவம்பர் 1) முதல் சிங்கப்பூரின் 36வது மருத்துவ சிறப்புத் துறையாக நிபுணர்கள் அங்கீகார வாரியத்தால் அங்கீகரிக்கப்படும். இந்த நடவடிக்கைக்கு சுகாதார அமைச்சும் ஆதரவு அளிக்கிறது.

சிங்கப்பூரில் குடும்ப மருத்துவர்களின் பங்களிப்புகளை உறுதிப்படுத்துவதில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் என்று சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) கூறியது. மேம்பட்ட மருத்துவ ஆற்றல்களைக் கொண்ட குடும்ப மருத்துவர்கள் ஏற்கெனவே ஒருங்கிணைந்த பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றும் தெரிவித்தது.

“இந்த அங்கீகாரம் மேம்பட்ட பயிற்சி பெற்ற குடும்ப மருத்துவர்களுக்கான சிறப்பு அங்கீகாரத்திற்கான தெளிவான பாதையை வழங்குவதுடன் முதன்மை மற்றும் சமூக பராமரிப்பின் தரத்தை உயர்த்தும்,” என்று அமைச்சு ஓர் ஊடகக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் குடும்ப மருத்துவர்கள் கல்லூரியின் ஆய்வாளர் என்ற சிறப்பைப் பெற்ற குடும்ப மருத்துவர்கள், புதிய குடும்ப மருத்துவ நிபுணர் அங்கீகாரத்திற்கான விண்ணப்பதாரர்களின் முதல் தொகுதியில் இடம்பெற அழைக்கப்படுவார்கள்.

தற்போது 200க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட குடும்ப மருத்துவர்கள், ஆய்வாளர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளனர். ஆய்வாளராக இருப்பவர்கள் சிறப்பு அங்கீகாரத்திற்குத் தகுதி பெற, பயிற்சியின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் மருத்துவ பயிற்சி அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அமைச்சு விவரித்தது.

“சிங்கப்பூர் மக்கள் தொகை மூப்படைந்து வருவதால், இது ஒரு முக்கியமான கொள்கை நடவடிக்கையாகும்.

“மேலும் நமது சுகாதாரப் பராமரிப்பு அமைப்பின் ஈர்ப்பை மருத்துவமனைகளிலிருந்து சமூகத்திற்கு மாற்றுகிறோம்.

“முதன்மைப் பராமரிப்பை இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்கும் குணப்படுத்தும் சிகிச்சையிலிருந்து மேலாண்மை மற்றும் தடுப்பு நிலைக்கும் மாற்றுகிறோம்,” என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறினார்.

குடும்ப மருத்துவர்கள் இந்த மாற்றத்திற்கு அவசியம் என்று திரு ஓங் கூறினார். ஏனெனில், அவர்கள் சுகாதாரப் பராமரிப்பில் முன்களப் பணியாளர்களாக உள்ளனர்.

“அவர்கள் நமது ஆரோக்கியத்தை நிர்வகிக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும் எங்கள் நம்பகமான ஆலோசகர்கள்.

“சமூகத்தில் பலதரப்பட்ட பராமரிப்பை ஒருங்கிணைப்பதிலும் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்,” என்றும் திரு ஓங் ஒரு ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

மேலும், குடும்ப மருத்துவத் துறை, ஒரு புதிய மேம்பட்ட குடும்ப மருத்துவத் திட்டத்தை உருவாக்கி வருகிறது. அதன் முதலாவது பயிற்சி மாணவர்கள் சேர்க்கை 2028ல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்