தாமான் ஜூரோங்கில் 1970களில், சகோதரி ஒருவருடன் சிறிய குடும்பத்தில் வளர்ந்த 55 வயது செல்வராணி சிதம்பரம், தற்போது புக்கிட் பாஞ்சாங்கில் ஐந்து வளர்ந்த பிள்ளைகளுடன் தம் பொற்காலத்தை உணர்வதாகக் கூறினார்.
பெரிய குடும்பம் வேண்டும் என்ற அவரது கனவு நனவாகியுள்ளது. சிறு வயதில் பொங்கலை வீட்டில் எளிய முறையில் கொண்டாடியதை நினைவுகூர்ந்த திருவாட்டி செல்வராணி, இப்போது பாரம்பரிய கூறுகளை மேலும் சேர்த்துக்கொண்டு கூடுதல் சிறப்புடன் கொண்டாடுவதில் இன்பம் காண்கிறார்.
“பொங்கல் பானைக்கு மஞ்சள், இஞ்சிக் கொத்து போன்றவற்றைக் கட்டும் பழக்கத்தை அண்மையில்தான் பின்பற்றத் தொடங்கினேன். அத்துடன் வாழைக்காய், பரங்கிக்காய், கருணைக்கிழங்கு என 10 வகையான காய்கறி வகைகளைச் சாம்பாருடன் சமைக்கிறேன். பாரம்பரிய உணவைப் பிள்ளைகள் மறவாதிருக்க வேண்டும் என்பதற்காக இவ்வளவும் செய்கிறேன்,” என்று புக்கிட் பாஞ்சாங்கில் வசிக்கும் அவர் கூறினார்.
சிங்கப்பூரில் இரண்டு, மூன்று பிள்ளைகளுக்கு மேல் உள்ள குடும்பங்களைக் காண்பது அரிது. ஐந்து பிள்ளைகள் விளையாடி வளர்ந்த இந்த வீட்டில், சிறப்பு நிகழ்ச்சிகள் என்றாலே பொங்கல் பாலைப்போல உல்லாசம் பொங்கி வழிவதைக் காண முடிகிறது.
“என் கணவர், அவருடைய பெற்றோருக்கு ஒரே பிள்ளை. சிறிய குடும்பங்களைச் சேர்ந்த நாங்கள் இருவருமே விருப்பப்பட்டு இத்தனை பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்துகொண்டோம்,” என்று சுயத்தொழில் செய்து வரும் திருவாட்டி செல்வராணி கூறினார்.
தற்போது இவர்களுக்கு மூன்று வயது பேத்தியும் உள்ளார். மூத்த மகனுக்கு இந்தப் பொங்கல் தலைப்பொங்கல் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி.
தாயாரையும் பணிப்பெண்ணையும் எல்லா வேலைகளையும் செய்யவிடாமல் பிள்ளைகள் ஒவ்வொருவரும் வீட்டு வேலை ஒன்றை எடுத்துச் செய்வதாகக் குடும்பத்தில் மூத்த பெண் பிள்ளையான ரோஸ்பிரியா சிதம்பரம், 31, தெரிவித்தார்.
“நானும் என் தங்கையும் செய்யும் அதே அளவு வேலையை என் சகோதரர்களும் செய்வார்கள். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ள நான், என் வீட்டில் காலையில் பொங்கல் வைப்பேன். ஆனால், இரவு நேரத்தில் என் தாயார் வீட்டுக்கு வருவேன்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஒற்றுமைக்குப் பாச உணர்வு தேவைப்பட்டாலும் அதே அளவுக்கு திட்டமிடும் திறன், சொன்ன சொல்படி நடந்துகொள்ளுதல், குறித்த நேரத்திற்கு வருதல் போன்ற பண்புகளும் ஐந்து பிள்ளைகள் உள்ள குடும்பத்திற்கு மிகவும் அவசியம் என்றார் எஸ்எம்ஆர்டியில் ரயில் ஓட்டுநராகப் பணிபுரியும் கதிர்செல்வம் சிதம்பரம், 32.
“பொங்கல் அன்று எனக்கு இரவு நேர வேலை. ஆயினும், என் வீடு, என் முதல் தங்கை வீடு, என் தாயார் வீடு என அனைவரது வீட்டுக்கும் செல்வேன்,” என்று அவர் கூறினார்.
குருவிக்கூடு போல பார்த்துப் பார்த்து உருவாக்கிய இந்த குடும்பத்தில் எல்லாரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை திருவாட்டி செல்வராணி சிரத்தையுடன் உறுதி செய்கிறார்.
எல்லாருக்கும் வேலை, சுய ஆர்வம், நண்பர்கள் போன்றவை இருந்தாலும் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பது அவர் வலியுறுத்தும் குடும்பப் பண்பாக உள்ளது.
வாரந்தோறும் ஒரு நாளாவது பிள்ளைகள் அனைவரையும் வீட்டுக்கு வரவழைத்து எல்லாருக்கும் சமைத்து, பரிமாறி, மனதாரப் பேசுவதாகக் கூறினார்.
“குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். எருதுகள் ஒற்றுமையாக இருந்தவரை புலிகள் அவற்றைத் தாக்கவில்லை என்ற நீதிக்கதையை நான் அடிக்கடி என் பிள்ளைகளுக்குச் சொல்வதுண்டு,” என்பதை அவர் இந்தப் பொங்கல் நன்னாளன்று கூற விரும்பினார்.