சிங்கப்பூரில் வாரந்தோறும் மளிகைப்பொருள்களை வாங்கச் செல்லும் குடும்பம் ஒன்று, தான் வாங்கிய பொருள்களில் அரிய வடிவிலான முட்டை ஒன்று இருந்ததைக் கண்டு ஆனந்தமடைந்தது.
வழக்கமாக முட்டை நீள்வட்ட வடிவில் இருக்கும். ஆனால், அவர்கள் வாங்கிய முட்டைகளில் ஒன்று மட்டும் கோள வடிவில் வட்டமாக இருந்தது.
அதனை வாங்கிய விராஜ் ஸ்வரூப், 42, மற்றும் அவரது மனைவி ஷர்மிஸ்டா நகார்கட்டி வியப்படைந்தனர். வழக்கத்திற்கு மாறான முட்டை வடிவத்தைக் கண்டு தங்களது 8 வயது மற்றும் 11 வயது குழந்தைகள் பரவசமடைந்ததாக அந்தத் தம்பதியினர் கூறினர்.
சிங்கப்பூரில் உள்ள ‘சியூ’ஸ் அக்ரிகல்சர்’ நிறுவனத்தின் தயாரிப்பான அந்த முட்டையை ஹவ்காங் அவென்யூ 1ல் உள்ள என்டியுசி கிளையில் அவர்கள் மே 27ஆம் தேதி வாங்கியிருந்தனர்.
வித்தியாசமான அந்த முட்டையின் மதிப்பு பற்றி மறுநாள் தமது மனைவி கூகலில் தேடும் வரை தங்களுக்குத் தெரியவில்லை என்றார் விராஜ்.
அந்த முட்டையின் அருமை பற்றி தமது மனைவி கண்டுபிடித்திருக்காவிட்டால் அதனை இந்நேரம் சமைத்திருப்போம் என்று கூறினார் அவர்.
குளிர்சாதனப் பெட்டியில் அந்த முட்டையை வைத்து தாங்கள் பாதுகாத்து வருவதாகவும் அதனைத் தொட யாரையும் அனுமதிக்கவில்லை என்றும் விராஜ் தெரிவித்தார்.
ஒரு பில்லியனில் ஒரு முட்டை மட்டுமே வட்ட வடிவமாக இருக்கும் என்பதால் அந்த அபூர்வ வடிவத்திற்காகவே இதற்கு முன்னர் அதுபோன்ற முட்டைகள் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு பிரிட்டனில் வட்ட வடிவ முட்டை ஒன்று 420 பிரிட்டிஷ் பவுண்டுக்கு (S$723) ஏலத்தில் வாங்கப்பட்டது. அந்த ஏலத்தொகை அனைத்தும் அறநிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாக பிபிசி கூறியது.
2024ஆம் ஆண்டிலும் ஒரு வட்ட வடிவ முட்டை 200 பிரிட்டிஷ் பவுண்டுக்கு ஏலத்தில் விற்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

