வரவிருக்கும் பொதுப் போக்குவரத்துக் கட்டண உயர்வு, கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனத்தின் 2024 நிதியாண்டின் வருமானத்தை உயர்த்தக்கூடும் என டிபிஎஸ் குழுமத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
பேருந்து, ரயில் போக்குவரத்தில் அது கொண்டுள்ள பங்குகளின்மூலம் இது சாத்தியப்படும் என அந்த ஆய்வு கூறியது.
இந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. அதன்மூலம் கிடைக்கும் ஆதாயங்களைக் கொண்டு, எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் 2024 நிதியாண்டின் வருமானம் $14.7 மில்லியனாக உயரும் என டிபிஎஸ் ஆய்வுக் குழு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம், கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனத்தின் நிகர லாபம் $11 மில்லியன் அதிகரிக்கும் என்று அது மதிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் 74.4 விழுக்காட்டுப் பங்குகளை கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனம் கொண்டுள்ளது.
இந்தப் பொதுப் போக்குவரத்து கட்டண உயர்வும் அதிக ரயில் பயணிகளின் எண்ணிக்கையும் இணைந்து 2024 நிதியாண்டில் எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் ரயில் சேவைப் பிரிவை லாபகரமாக இயங்க உதவும் என டிபிஎஸ் எண்ணுகிறது.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெருவிரைவு ரயிலில் பயணம் செய்தோர் எண்ணிக்கை, கொவிட்-19க்கு முந்திய நிலையை எட்டியதாக டிபிஎஸ் கூறியது.
வீட்டிலிருந்து பணிபுரியும் வேலைச்சூழல் காரணமாக, கொவிட்-19 க்கு முந்திய நிலைக்குப் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை திரும்புமா என்ற சந்தேகத்தைப் போக்க இது உதவியது என்றும் ஆய்வுக்குழு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டுப் பிற்பகுதியில் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதை அடுத்து, எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் கூடுதலாக $20.9 மில்லியன் ஆண்டு வருமானம் ஈட்டும் என எதிர்பார்ப்பதாகப் பொதுப் போக்குவரத்து மன்றம் (பிடிசி) திங்கட்கிழமை தெரிவித்தது.