பண்ணை மீன்களைக் கொல்லும் நச்சுக்கிருமி: தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு

பண்ணை மீன்களைக் கொல்லும் நச்சுக்கிருமி: தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு

2 mins read
aff71886-f860-4cf0-b0e4-fd9d0870979e
தடுப்பூசியைக் கண்டுபிடித்தவர்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறையின் உயிரியல் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் யாங் டாய்வென்னும் (இடது) ஹோங் ஹுவி யீவும் அடங்குவர். - சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்

பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்களைக் கொடூரமான நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், அவற்றின் தீவனத்துடன் கலந்து கொடுக்கக்கூடிய புதிய வாய்வழித் தடுப்பு மருந்து ஒன்றைச் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நச்சுக்கிருமிகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய, அதே வேளையில் ஊசி மூலம் தடுப்பூசி செலுத்த முடியாத மிகச் சிறிய மீன் குஞ்சுகளுக்கு இந்த வாய்வழித் தடுப்பு மருந்து பெரிதும் பயனளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்களின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி, மிக அதிக இறப்பு விகிதத்தை ஏற்படுத்தக்கூடிய ‘நெர்வஸ் நெக்ரோசிஸ் நச்சுக்கிருமி’ உலகளாவிய மீன்வளர்ப்புத் துறைக்கு ஒரு தலையாய அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.

இக்கிருமித்தொற்று பரவினால், குறிப்பாகப் பருவமடையா இளநிலை மீன் குஞ்சுகள் நூற்றுக்கு நூறு விழுக்காடு இறக்க நேரிடும். அதிலிருந்து தப்பிப் பிழைக்கும் மீன்களின் வளர்ச்சியும் பேரளவில் பாதிக்கப்படும்.

இதுகுறித்து இந்த ஆய்வுக் குழுவுக்குத் தலைமை தாங்கிய சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக அறிவியல் துறையின் உயிரியல் பிரிவின் பேராசிரியர் யாங் டாய்வென், தற்போதைய நிலையில் தடுப்பூசிகள் பெரும்பாலும் மீன்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஊசி மூலம் செலுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.

இது சவால்மிக்கப் பணி என்பதோடு, சிறிய அளவிலான மீன் குஞ்சுகளுக்கு இவ்வகை ஊசித் தடுப்புமுறைகள் உகந்தவை அல்ல. தற்போது கண்டறியப்பட்டுள்ள வாய்வழித் தடுப்பு மருந்து, சிங்கப்பூரில் வளர்க்கப்படும் கலவாய் மீன் மற்றும் கொடுவா மீன் போன்ற பல்வேறு கடல் மீன் வகைகளுக்குப் பயன்படுத்த ஏற்றதாகும்.

மீன் குஞ்சுகள் வளர்க்கப்படும் இளநிலை பருவத்திலேயே இந்தத் தொற்றுநோயிலிருந்து அவற்றைப் பாதுகாப்பது மீன்களின் வாழ்நாளை நீட்டிப்பதோடு, ஒட்டுமொத்த உற்பத்தித் திறனையும் மேம்படுத்தும் என்று பேராசிரியர் யாங் மேலும் விவரித்தார்.

தெமாசெக் வாழ்வியல் அறிவியல் ஆய்வுக்கூடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் உள்ளடங்கிய இந்த ஆறு பேர் கொண்ட குழுவின் ஐந்து ஆண்டுக்கால உழைப்பில் உருவான இந்த ஆய்வறிக்கை, அண்மையில் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்