இவ்வாண்டின் இறுதிக் காலாண்டுக்குள் சிங்கப்பூரில் உள்ள மின்சார வாகன மின்னூட்டுக் கருவிகளில் அதிவேக மின்னூட்டிகள் சேர்த்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக 200 கிலோ மீட்டர் செல்லத் தேவையான மின்சாரத்தை வாகனங்களுக்கு ஐந்து நிமிடங்களில் வழங்கும் ஆற்றலை இந்த அதிவேக மின்னூட்டிகள் கொண்டுள்ளன.
தற்போது பயன்பாட்டில் உள்ள வேக மின்னூட்டிகள் 40 நிமிட மின்னூட்டின்போது வழங்கும் மின்சார அளவைவிட இது பத்து மடங்கு அதிகம். இந்த அதிவேக மின்னூட்டிகளை சீனத் தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவேய் உற்பத்தி செய்துள்ளது.
தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உள்ள பொது வாகன நிறுத்துமிடத்தில் இந்த அதிவேக மின்னூட்டிகள் பொருத்தப்படும்.
அவற்றில் குறைந்தது நான்கு மின்னூட்டுப் பிரிவுகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஏற்கெனவே மூன்று மின்னூட்டுப் பிரிவுகள் உள்ளன. அவை எஸ்பி மொபிலிட்டிக்குச் சொந்தமானவை. எஸ்பி மொபிலிட்டி, மின்சார சேவை வழங்கும் எஸ்பி குழுமத்தின் துணை நிறுவனமாகும்.
மின்சார கார்கள் மட்டுமன்றி, மின்சார வர்த்தக வாகனங்கள், மின்சாரத் தனியார் பேருந்துகள் ஆகியவற்றுக்கும் இந்தப் புதிய அதிவேக மின்னூட்டிகள் மின்சாரம் வழங்கும்.
மின்சார வர்த்தக வாகனங்களும் மின்சாரத் தனியார் பேருந்துகளும் பெரிதாக இருப்பதால் பொது வாகன நிறுத்துமிடங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னூட்டுப் பிரிவுகளை அவை பயன்படுத்த முடியாது. ஆனால் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பொது வாகன நிறுத்துமிடத்தை அவை பயன்படுத்தலாம்.
தொடர்புடைய செய்திகள்
இந்த இடம் சிங்கப்பூரின் தென்பகுதியில் முக்கிய போக்குவரத்து மையமாகத் திகழ்வதாக எஸ்பி மொபிலிட்டி மற்றும் ஹுவாவெய் நிறுவனம் கூறின.
அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப கனரக வர்த்தக வாகனங்களுக்கும் பேருந்துகளுக்கும் சேவை செய்யக்கூடிய வேகமான மின்னூட்டிகளை நிறுவுவதற்கு தளங்களைத் தேடி வருவதாக எஸ்பி மொபிலிட்டியின் நிர்வாக இயக்குநர் திரு டீன் செர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். மே 2025 நிலவரப்படி, 5,806 முழு மின்சார வர்த்தக வாகனங்களும் பேருந்துகளும் உள்ளன. கடந்த ஆண்டு இது 4,949, 2023ல் 3,580 என்று இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

