சிங்கப்பூரின் வடக்குப் பகுதிகளில் வாழும் மக்கள் தீவின் மற்றப் பகுதிகளை ஒப்பிடுகையில் குறைந்த நேரம் உடற்பயிற்சி செய்கிறார்கள், மேலும் ஆரோக்கியத்திலும் பின்தங்கியுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
வடக்குப் பகுதியில் உள்ள மக்கள் ஆரோக்கியமாகவும் துடிப்புடன் இயங்கவும் அமைச்சர் ஓங், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) காலை செம்பவாங் செண்டரலில் விரைவு நடைப்பயிற்சி இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
“வடக்கில் சுகாதார நிலைமை சற்று சரியில்லை. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது, அதேபோல் நீரிழிவு உள்ளவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது,” என்று திரு ஓங் கூறினார்.
“இதன் காரணமாக வடக்குப் பகுதிகளில் சில சுகாதாரத் திட்டங்களை நடைமுறைப் படுத்துகிறோம். திட்டங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்றால் அது சிங்கப்பூரின் மற்ற பகுதிகளிலும் செயல்படுத்தப்படும்,” என்றார் அமைச்சர் ஓங்.
விரைவு நடைப்பயிற்சி எளிமையானது, பெரும்பாலானவர்களால் செய்யமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
செம்பவாங் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள திரு ஓங், “ சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் தரவுகள் படி சிங்கப்பூர் மக்கள் சராசரியாக வாரம் 120 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்கின்றனர். ஆனால் வடக்கில் வாழும் மக்கள் சராசரியாக வாரம் 100 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்கின்றனர்,” என்றார் அவர்.
‘Let’s Jalan’ என்ற விரைவு நடைப்பயிற்சி இயக்கத்தை செம்பவாங் சென்டரலின் புக்கிட் கேன்பராவில் 500 குடியிருப்பாளருடன் திரு ஓங் தொடங்கி வைத்தார்.
ஸ்போர்ட்ஸ்எஸ்ஜி மற்றும் துடிப்பாக முதுமையடையும் நிலையங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இந்த உடற்பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
குடியிருப்பாளர்கள் உடற்பயிற்சி குழுக்களை அமைத்து மற்ற குடியிருப்பாளர்களுக்கும் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். குறிப்பாக உடற்பயிற்சி செய்யாமல் இருக்கும் நபர்களை உடற்பயிற்சி செய்யுமாறு இது ஊக்குவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
செம்பவாங் சென்டரலில் ஏழு விரைவு நடைப்பயிற்சி குழுக்கள் உள்ளன. அவற்றில் இரண்டு புதிதாக உருவாக்கப்பட்டவை. இக்குழுக்களில் 280க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
அதேபோல் இவ்வட்டாரத்தில் சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் Healthy 365 செயலியில் சோதனை முயற்சியில் புதிய அம்சங்களைச் சேர்ந்து, மக்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

