மரணம் விளைவித்த விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக 88 வயது முதியவருக்கு $14,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இங் சியாக் ஹாய் எனப்படும் அவர், கவனமின்றி வாகனமோட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
2022 நவம்பர் 1ஆம் தேதி தமது இரு நண்பர்களுடன் கேலாங் லோரோங் 8லிருந்து ஆர்ச்சர்ட் ஹோட்டலுக்கு காரில் சென்றபோது இங் கட்டுப்பாட்டை இழந்தார்.
மத்திய விரைவுச்சாலையில் காரை ஓட்டிச் சென்ற அவர், புக்கிட் தீமா ரோட்டுக்குள் நுழைய முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்தார்.
அதன் காரணமாக அவரது நீல நிற மெர்சிடிஸ் பென்ஸ் கார் மரத்தில் மோதி வலது பக்கமாகச் சாய்ந்தது.
அந்த விபத்தில் அவரது நண்பரான 72 வயது இங் திட் ஹங் மரணமடைந்தார். மற்றொரு நண்பரான 76 வயது டான் டெக் சூன் என்பவருக்கு நெஞ்சிலும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டன.
இங்கிற்கும் காயங்கள் ஏற்பட்டன. 2022 நவம்பர் 1 முதல் நவம்பர் 4 வரை அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
‘இங் ஆ சியோ பக் குத் தே’ எனப்படும் உணவகத்தின் நிறுவனரான இங்கிற்கு, எட்டு ஆண்டுகளுக்கு எந்தவித வாகனத்தையும் ஓட்டக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு உள்ளது.