சிங்கப்பூரில் எஞ்சியுள்ள மிதக்கும் மீன் பண்ணைகளில் ஒன்று மூடப்படக்கூடும்

2 mins read
fbdf5615-db0b-4ddb-9281-299dc00bf98c
புலாவ் உபினுக்கு அருகில் உள்ள மீன் பண்ணையைத் தக்கவைக்க சிங்கப்பூர் மரபுடைமை சமூகம் அதிகாரிகளிடம் மனுத் தாக்கல் செய்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரில் எஞ்சியுள்ள நான்கு மிதக்கும் மீன் பண்ணைகளில் (கேலொங்) ஒன்று விரைவில் மூடப்படக்கூடும்.

புலாவ் உபின் கடற்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அந்த மிதக்கும் மீன் பண்ணையின் சொந்தக்காரர், ஓய்வுபெற்ற திரு திமத்தி இங், 76.

கடந்த ஜூன் மாதம், அதனையும் அதற்கு அருகில் இருக்கும் மீன் பண்ணை ஒன்றையும் தொடர்ந்து நடத்தப்போவதில்லை என்று அவர் முடிவெடுத்தார்.

அவர் அவ்விரு பண்ணைகளையும் இருபது ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார்.

அந்த மிதக்கும் மீன் பண்ணை தொடர்ந்து செயல்படவேண்டும் என்று கோரி, சிங்கப்பூர் மரபுடைமைச் சமூகம் அதிகாரிகளிடம் மனுத் தாக்கல் செய்துள்ளது. அந்தப் பண்ணை கல்வி, ஆய்வு நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று அது கூறியது.

சமூக, கல்விக் காரணங்களுக்காக மிதக்கும் மீன் பண்ணையைத் தக்கவைப்பதற்கான சாத்தியத்தை உறுதிப்படுத்த, ஆய்வு ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில் ஆலோசகரைப் பணியில் அமர்த்த இவ்வாண்டு இறுதிவரை அதிகாரிகள் மரபுடைமை சமூகத்திற்கு கால அவகாசம் கொடுத்துள்ளதாக அதன் தலைவர் ஃபௌஸி இஸ்மாயில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

அந்த ஆய்வுக்கு நிதி ஆதரவு வழங்க மரபுடைமை சமூகம் நன்கொடையாளர்களை நாடுவதாகவும் அவர் சொன்னார்.

இதற்கிடையே, இருபது ஆண்டுகளாக அந்தப் பண்ணைகளை நடத்திவந்ததில் கிட்டத்தட்ட $2 மில்லியன் இழந்திருப்பதாகத் திரு இங் கூறினார். பல்லாண்டுகள் யோசித்த பிறகு பண்ணைகளைக் கைவிட அவர் முடிவெடுத்தார்.

பண்ணைகளை அழிப்பதற்குப் பதிலாக அவற்றை விற்பதே அவரின் விருப்பம். இருப்பினும், தற்போதுள்ள அத்தகைய பண்ணைகளின் உரிமங்கள் மாற்றப்படுவதற்கு அனுமதி கிடையாது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் கூறியது.

குறிப்புச் சொற்கள்