மூன்றுமுறை புற்றுநோய் பாதிப்பு, அதற்காக இரண்டு அறுவை சிகிச்சைகள், வலிமிகுந்த கதிரியக்க, கீமோதெரபி சிகிச்சைகள் என அடுத்தடுத்து வாழ்வைப் புரட்டிப்போட்ட நிகழ்வுகளைக் கடந்து தற்போது தன்னைப் போன்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக வாழ்கிறார் அபர்ணா.
தற்போது சிங்கப்பூர் புற்றுநோய்ச் சங்கம் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் இவர், தனது அனுபவத்தைப் பகிர்வதோடு பாதிக்கப்பட்ட பிற பெண்களுக்கு ஊக்கமளிக்கிறார். இவ்வாண்டின் ‘கிரேட் ஈஸ்டர்ன் விமன்ஸ் ரன்’ (Great Eastern Women’s Run) எனும் மகளிருக்கான தொடரோட்டத்தில் இவர் பங்கேற்கவுள்ளார்.
மணம் முடித்து எட்டு மாதங்கள் கனவுபோல் நாள்கள் நகர்ந்துசெல்ல, அக்கனவைக் கலைத்தது ‘ஹாட்ஜ்கின்ஸ் லிம்ஃபோமா’ (Hodgkin’s lymphoma) எனும் ஒருவகைப் புற்றுநோய். “புற்றுநோய் குறித்த பயம் அதிகம் இருந்த 1996 காலகட்டத்தில், இந்தச் செய்தி என்னை உலுக்கியது. எனக்குப் புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட அந்த வினாடி இன்னும் என் மனத்தில் காணொளிப் படம்போலப் பதிந்துள்ளது,” என்கிறார் அபர்ணா.
21 வயதில் ஆறுமுறை கீமோதெரபி, இருமுறை கதிரியக்க சிகிச்சைகள் அளிக்கப்பட்டது வலிமிகுந்த அனுபவம் என்று கூறிய அபர்ணா, “அப்போதெல்லாம் புற்றுநோய் பாதிப்பு வெளியில் தெரிந்தால் பலரும் இரக்கத்துடன் பார்ப்பர். அதைத் தவிர்ப்பதற்காகவே யாரிடமும் சொல்லாமல் சிகிச்சை மேற்கொண்டோம்,” என்றார். கணவர் அளித்த ஆதரவு, குடும்பம் தந்த ஊக்கம் ஆகியவையே தன்னைப் புற்றுநோயிலிருந்து மீட்டதாகச் சொன்னார் அபர்ணா.
விளம்பர, வாடிக்கையாளர் சேவைத் துறையில் பணியாற்றி வந்த இவரால், சிகிச்சை காரணமாக வேலையைத் தொடரமுடியாமல் போனது. ஓரிரு ஆண்டுகளில் முழுமையாக மீண்டார். இருப்பினும், 2015ஆம் ஆண்டு மீண்டும் புற்றுநோய்க்கு ஆட்பட்டார் அபர்ணா.
இம்முறை ‘பாப்பில்லரி தைராய்டு’ எனும் வகைப் புற்றுநோய் என்பதால் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. வளரும் பருவத்திலுள்ள குழந்தைகளை வைத்துக்கொண்டு சிகிச்சை பெறுவது அபர்ணாவுக்குப் போராட்டமாக இருந்தது.
“அப்போதுதான் எதிர்பாராத அளவு நண்பர்களின் ஆதரவு கிட்டியது,” என்கிறார் அபர்ணா.
“உண்மையில் நான் ஒன்றும் தைரியசாலி அல்ல. ஆனால், என் கணவரும் நண்பர்களும் எனக்கு மன உறுதி அதிகம் என நம்பினர். என்னையும் நம்ப வைத்தனர். அதுவே என்னை இன்றுவரை உந்தித் தள்ளிவருகிறது,” என்கிறார் இவர்.
“பின்னர் 2023ஆம் ஆண்டில் மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டபோது என் பிள்ளைகள் வளர்ந்திருந்தனர். அவர்களும் என்னை நோயாளிபோல் நடத்தாமல் மகிழ்ச்சியாக வைத்திருந்தனர்,” என்றார் அபர்ணா.
“2023ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட மூன்றாவது புற்றுநோய் என்னை அசைக்கவில்லை. அது என் வாழ்வை மாற்றிவிடக் கூடாது என்று உறுதியாக இருந்தேன். அறுவை சிகிச்சைக்குமுன் ‘ஹேரி பாட்டர்’ படம் பார்த்தேன். பயணம் செய்தேன். பின்னர் வந்து மன உறுதியுடன் அறுவை சிகிச்சையை எதிர்கொண்டேன்,” என்றார் அபர்ணா.
தொடர்ந்து, சிங்கப்பூர்ப் புற்றுநோய்ச் சங்கம் அளிக்கும் உணவுமுறை ஆலோசனைகள், உடலியக்க சிகிச்சை உள்ளிட்டவற்றை மேற்கொண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார் அபர்ணா.
அப்போதுதான் தன்னைப்போல பலருக்கும் ஆதரவு தேவைப்படுவதை உணர்ந்தார். இயன்றவரை புற்றுநோய் குறித்த பயத்தைப் போக்க உதவி வருகிறார்.
“கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது,” என்று சொன்ன அபர்ணா, “எந்த நோயாக இருந்தாலும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக உரிய சோதனைகளை மேற்கொள்வது அவசியம். காலம் தாழ்த்திவிட்டுப் பின்னர் அழுவது வீண்,” என்றார்.
‘கிரேட் ஈஸ்டர்ன் விமன்ஸ் ரன்’ தொடரோட்டம் தனது மனவலிமைக்கு ஒரு தேர்வு என்றும் அதனை எப்படியும் முடிப்பேன் என்றும் சிரிப்புடன் கூறுகிறார் அபர்ணா.
வாழ்வை முழுமையாக வாழவேண்டும் என்னும் எண்ணம் தன்னை ஓட வைப்பதாகச் சொல்லும் இவர், ஒவ்வொரு நாளையும் இன்பமாகக் கழிப்பதாகவும் இயன்றால் இதற்குப் பிறகு ஏதேனும் வேலையில் சேர விரும்புவதாகவும் சொன்னார்.
‘கிரேட் ஈஸ்டர்ன் விமன்ஸ் ரன்’ மகளிர் தொடரோட்டம்
தொடர்ந்து 18 ஆண்டுகளாக நடந்துவரும் இந்தத் தொடரோட்டம் இவ்வாண்டு அக்டோபர் 27ஆம் தேதி சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் நடைபெற உள்ளது. ஏறத்தாழ 12,000 பெண்கள் பங்கேற்கவுள்ள இந்தத் தொடரோட்டம் பெண்களுக்கு மட்டுமின்றி புற்றுநோயால் பாதிப்படைந்தோர் இயல்பு வாழ்க்க்குத் திரும்ப உதவும் வகையிலும் நிதி திரட்டும்.
கலாசார, சமுக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இந்தத் தொடரோட்டத்தைத் தொடங்கிவைப்பார்.