கடந்த 2022ஆம் ஆண்டில் தனது இரட்டைப் பிள்ளைகளைக் கொன்றதாகக் குற்றம்சுமத்தப்பட்ட சேவியர் யாப் ஜுங் ஹோன்னுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த இரண்டு சிறுவர்களின் கழுத்தை நெரித்ததையும் அவர்கள் உண்மையிலேயே இறந்துவிட்டார்களா என்பதை உறுதிசெய்ய, அவர்களின் முகத்தைக் கால்வாய் நீரில் மூழ்கடித்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.
சேவியர், 49, தொடர்புத்திறன் குறைபாடுள்ள தனது 11 வயது நிரம்பிய இரு மகன்களையும் கொன்றுவிட்டால், தனது மனைவியின் பாரம் குறையும் என்று நம்பினார். அதோடு அவரும் அவரது மனைவியும் இறந்த பிறகு, ஏஸ்டன் யாப் காய் ஷர்ன், ஈத்தன் யாப் ஈ சர்ன் என்ற தனது இரண்டு மகன்களை யாரும் கவனித்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் மற்றவர்களின் கேலிக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் அஞ்சியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மகன்களைக் கொன்ற பிறகு, சேவியர் யாப் தன்னைத் தானே மாய்த்துக்கொள்ள முயன்றார். பனிக்கட்டியை உடைக்க உதவும் ஆயுதத்தைப் பயன்படுத்தி தன் வயிற்றையும், நெஞ்சையும், முதுகையும் குத்திக்கொண்டார். அதோடு, அவர் மரக் கிளையையும் பாறையையும் கொண்டு தனது தலையில் அடித்துக்கொண்டார்.
சேவியர் யாப் 2022ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி தனது திட்டங்களை நிறைவேற்ற முடிவுசெய்தார். தோ டக் ரோட்டில் அவரது கூட்டுரிமை வீட்டுக்கு அருகில் உள்ள கிரீன்ரிட்ஜ் கிரசெண்ட்டில் இருக்கும் விளையாட்டு மைதானத்திற்கு அவர் மகன்களை அழைத்துச் சென்றார்.
மகன்கள் ஏறக்குறைய 10 நிமிடங்கள் விளையாடிய பிறகு, அவர்களை அருகில் உள்ள கால்வாய்க்குக் கொண்டுசென்றார் சேவியர் யாப்.
அதன் பிறகு அவர் தடி ஒன்றை எடுத்து ஈத்தனின் கழுத்தில் வைத்து இறுக்கி அழுத்தினார். தடி உடைந்ததும், தனது முழங்கையை மகனின் கழுத்தில் வைத்து அழுத்தினார். முதலில் போராடிய ஈத்தன் பின்னர் பேச்சு மூச்சின்றி காணப்பட்டான். பின்னர் சேவியர் யாப் மகனின் முகத்தை கால்வாய் நீரில் மூழ்கடித்தார்.
அதனைத் தொடர்ந்து சிறிது தூரம் தள்ளி அமைதியாக நின்றுகொண்டிருந்த ஏஸ்டனை நோக்கிச் சென்றார், சேவியர் யாப். மற்றொரு மகனிடம் செய்ததுபோலவே, அவர் தனது முழங்கையை ஏஸ்டனின் கழுத்தில் வைத்து அழுத்தி, அவனது முகத்தை நீரில் மூழ்கடித்தார்.
தொடர்புடைய செய்திகள்
செவ்வாய்க்கிழமை வழக்கின் தீர்ப்பு நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டபோது, முகத்தில் எவ்வித உணர்ச்சியுமின்றி ஸேவியர் யாப் காணப்பட்டார்.
நோக்கமில்லா மரணத்தை விளைவித்ததாக சேவியர் யாப்மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவை ஒவ்வொன்றுக்கும் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


