மூன்று வயது மகன் ஏறக்குறைய நீச்சல் குளத்தில் மூழ்கியதை நீச்சல் பயிற்சியாளர் கவனிக்கத் தவறிவிட்டதாக தந்தை குற்றம் சாட்டியிருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) நடந்த சம்பவத்தை நீச்சல் பயிற்சி கழகம், உள்விசாரணை நடத்தி வரும் வேளையில் அந்தப் பயிற்சியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப மேலாளரான ஹுவாங், தனது மூன்றரை வயது மகனை யூனூசில் உள்ள சிங்போஸ்ட் மையத்தில் இயங்கும் ‘லிட்டில் ஸ்பிளாஷஸ் அக்வாடிக்ஸ்’ நீச்சல் பயிற்சிப் பள்ளியில் சேர்த்திருந்தார் என்று ‘லியான்ஹ சாவ்பாவ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறுவனின் நான்காவது, கடைசி பயிற்சியின்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
திரு ஹுவாங், 38, நீச்சல் குளப்பகுதிக்குள் பெற்றோருக்கு அனுமதி இல்லை என்றார்.
இருப்பினும், தனது மகனைப் பற்றிய கவலையால் அவரும் அவரது மனைவியும் அருகில் நின்று பயிற்சியைக் கவனித்துக்கொண்டிருந்தனர்.
மதியம் 3.21 மணியளவில், பயிற்சியாளர் மற்றொரு குழந்தைக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது, ஹுவாங்கின் மகனும் மற்றொரு மாணவரும் நீருக்கடியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு பலகையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது இரு குழந்தைகளும் எந்தவித மிதவை சாதனங்களையும் அணிந்திருக்கவில்லை, மகன் வழுக்கித் தண்ணீருக்குள் விழுந்தபோது, அந்தப் பலகை பயிற்சியாளரின் பார்வையில்படாத கோணத்தில் இருந்ததாகவும் தந்தை கூறினார்.
சிறுவன் சுமார் 10 வினாடிகள் தண்ணீருக்குள் இருந்ததாகவும், ஏதோ தவறாக நடப்பதை உணர்ந்து, தான் உடனடியாக விரைந்து சென்று மகனை வெளியே இழுத்ததாகவும் ஹுவாங் கூறினார்.
ஹுவாங்கின் கூற்றுப்படி, பயிற்சியாளர் மன்னிப்பு மட்டுமே கேட்டாரென்றும், என்ன நடந்தது என்பதை கவனிக்கவில்லை எனக்கூறிவிட்டுப் பயிற்சியை அவர் தொடர்ந்து நடத்தியதாகவும் தெரிய வருகிறது.
அதன் பிறகு அந்தப் பயிற்சியாளர் தனது மகனின் நலன்குறித்து விசாரிக்கவில்லை என்றும் தந்தை குறைபட்டுக் கொண்டார்.

