பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் நோக்கத்துடன் முரட்டுத்தனமாய் அவர்களைக் கையாண்டதை ஒப்புக்கொண்ட தந்தை ஒருவருக்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) 15 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
47 வயதுத் தந்தை, இதற்கு முன்னர் இரண்டு மகன்களையும் தவறாய் நடத்தியதை ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் அடையாளத்தைக் காக்கும் நோக்கத்துடன் அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
சிறார், இளம் வயதினர் சட்டத்தின்கீழ் மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். தீர்ப்பு விதிக்கும் முன்பு மேலும் ஐந்து குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன.
சம்பந்தப்பட்ட ஆடவருக்கு முன்னாள் மனைவியின் மூலம் 15 வயதிலும் 11 வயதிலும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன், சிறப்புத் தேவையுடையவர். ஆனால் அவரால் நன்றாக இயங்க முடியும்.
மகன்களை ஆடவர் அறைவார் என்றும் கிள்ளுவார் என்றும் தண்டனையாக அவர்களை முழங்காலிட வைத்து உணவு கொடுக்க மறுப்பார் என்றும் அவரின் முன்னாள் மனைவி கூறினார்.
2021ஆம் ஆண்டு, இளைய மகனைக் காற்சட்டையை அகற்றிவிட்டு சுவரை நோக்கி நிற்குமாறு கூறியிருக்கிறார் ஆடவர். பின்னர் பிரம்பால் பிள்ளையின் பிட்டத்திலும் கால்களிலும் அவர் அடித்திருக்கிறார். அதனால் மகனுக்குச் சிராய்ப்புகளும் தழும்புகளும் ஏற்பட்டன.
2024ல் நடந்த ஒரு சம்பவத்திற்குப் பிறகு, பிள்ளைகளின் பாதுகாப்புக் கருதி ஆடவரின் முன்னாள் மனைவி அவர்களுடன் வேறு இடத்திற்குச் சென்றார்.
தொடர்புடைய செய்திகள்
அதே ஆண்டு மார்ச் மாதம், ஆடவர் காவல்துறையிடம் தமக்கு எதிராகவே புகார் அளித்தார். மூத்த மகனை நல்வழிப்படுத்த அதிக வன்முறையைப் பயன்படுத்தியதாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இரண்டு மாதத்திற்குப் பிறகு, சமூக ஊழியர் ஒருவரின் ஆலோசனைப்படி, பிள்ளைகளின் தாயார் காவல்துறையில் புகார் கொடுத்தார்.
பிள்ளையைத் தவறாக நடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், எட்டு ஆண்டு வரை சிறைத்தண்டனை அல்லது $8,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

